அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கமலா ஹாரிஸ் என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அமெரிக்க மக்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பிடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றி பெற்றனர். தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடனுக்கும், கமலா ஹாரிஸ்க்கும் பல்வேறு தலைவர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர். அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் இவர்களது வெற்றியை அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிசின் வெற்றியை அவரது சொந்த ஊரான தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தினரும் கொண்டாடி வருகின்றனர். வீட்டின் முன்பு வாழ்த்துக்கூறி கோலமிட்டு வெற்றியை வரவேற்றனர்.

அப்போது கமலா ஹாரிஸ் பேசியதாவது: வெற்றிக்காக உழைத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி. மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்றி இருக்கின்றனர். சிறந்த எதிர்காலத்தை உருவாக்க நமக்கு சக்தி இருக்கிறது. நான் இன்று மிகவும் பொறுப்பான ஒரு பெண்ணுக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அது என் அம்மா, ஷியாமளா கோபாலன் ஹாரிஸ் தான். அவர் தனது 19 வயதில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தபோது இந்த நிலையை எட்டுவோம் என நினைத்திருக்கமாட்டார். ஆனால் இதுபோன்ற தருணம் அமெரிக்காவில் சாத்தியமாகும் என அவர் ஆழமாக நம்பினார்.

நான் அமெரிக்க துணை அதிபராகியுள்ள முதல் பெண்ணாக இருக்கலாம்; ஆனால் கடைசி பெண்ணல்ல. கருப்பின பெண்கள் உட்பட அனைத்து பெண்களுக்கும் சம உரிமை நிலைநாட்டப்படும். அமெரிக்க மக்களுக்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன். ஒபாமா வழியில் அமெரிக்கா நலனுக்காக செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.