இன்னும் ஓரிரு வருடங்களில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 120 கோடியை தாண்டும் என்பதால், இந்தியாவில் தரவு சேவை மைய தேவை என்பது அதிகரிக்கும் எனக் கூறினார்.
தேசிய தரவு மையங்களை இந்தியா முழுவதும் அமைப்பதற்கான தொழில்களின் மூலம் 3 லட்சம் கோடி முதலீடுகளை எதிர்பார்ப்பதாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தேசிய தரவு மையம் மற்றும் மேக கணிமை(கிளௌடு) கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். மேலும் இந்த கொள்கை தொடர்பாக தங்களுடைய கருத்துக்களை மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்த மாநில பிரதிநிதிகள், கிளௌடு மையத்தை, கூடுதல் பாதுகாப்புடனும், எளிமையாகவும், கையாளும் வகையில் சில அம்சங்கள் கொள்கைகள் இடம்பெற வேண்டும் என கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் கூறுகையில், இந்தக் கொள்கை தொடர்பாக அனைத்து மாநிலங்களின் கருத்துக்களை கேட்ட பின் இந்த கொள்கை இறுதி செய்யப்படும் என்றார்.

இந்நிலையில், இந்தியாவில் 80 கோடிக்கும் அதிகமானோர் இணைய சேவையை பயன்படுத்தி வருவதாக கூறிய அவர், குறிப்பாக பெண்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தங்களுடைய கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார். அதேபோல் இன்னும் ஓரிரு வருடங்களில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 120 கோடியை தாண்டும் என்பதால், இந்தியாவில் தரவு சேவை மைய தேவை என்பது அதிகரிக்கும் எனக் கூறினார். அதேபோல் இணைய வசதியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழ்நிலையில், அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் அம்சங்கள் இந்த கொள்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறிய அவர் தற்போது இந்தியா முழுவதும் அமைப்பதற்கான தொழில்களின் மூலம் 3 லட்சம் கோடி முதலீடுகளை எதிர்பார்ப்பதாகவும், இதன்மூலம் தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை பெற முடியும் என்று தெரிவித்தார்.
உலக அளவில் பயன்படுத்தப்படும் மின்னணு சேவைகளை இந்தியாவிலேயே சேகரிக்கும் வகையில் தரவு மையங்கள் அமைப்பதற்கான இடம் இந்தியாவில் உள்ளது என்றும், உலக அளவில் தேசிய தரவு மையத்தில் திறன் என்பது 450ஆக தற்போது உள்ள சூழ்நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் இத்திறன், கூடுதலாக 2000 மெகாவாட்டாக சேர்க்கப்படும் என்றும் பேசினார். அதுமட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், புதுப்பிக்கத்தக்க மின் சாரம் மற்றும் பசுமை மின்சாரம் போன்றவை பயன்படுத்தப்படும் என்று கூறிய மத்திய அமைச்சர், ஒரு மாநிலத்தில் தரவு மையத்தை உருவாக்க தேவையான மின்சாரம், நீர் மற்றும் நிலம் போன்றவற்றை வழங்குவதற்கு அந்த மாநிலங்கள் முன்வர வேண்டும் என்றும், அப்போது தான் முழுமையான வேலைவாய்ப்பை அம்மாநிலம் பெறும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், மேகக் கணினி தொழில்நுட்பத்தில் அதிக நிறுவனங்கள் புதிய முயற்சிகளை கையாள வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும், உலக அளவில் தரவு சேவை மையத்தின் தேவை என்பது அதிகரித்து இருக்கிறது. எனவே இந்தியாவிலும் இந்த சேவைக்கான மையத்தின் தேவை இருப்பதன் காரணத்தால், இந்தியா தற்சார்புடன் இருக்கும் வகையில் இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்றார். மின்னணு உற்பத்தியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கேந்திரமாக விளங்குவதாக கூறிய அமைச்சர், தரவு சேவை மையத்தின் தேவைகள் தற்போது அதிகரித்ததன் காரணமாக புதிய தொழில் நுட்பங்கள் உருவாக்க நினைப்பவர்கள் இதனைப் பயன்படுத்தி தரவு சேவை மையங்களை உருவாக்க வேண்டும் என்றும், இன்னும் ஓராண்டுகளில் 60 தொழில் நிறுவனங்கள் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.
