உலகத்திலேயே, தேர்தல் மூலம் இடது சாரி கட்சி வென்ற மாநிலம் கேரளா. ஆனால், காங்கிரஸ் இன்னும் கேரளாவில் மாற்றுக் கட்சியாகவே இருக்கிறது.

1967 ம் ஆண்டு, தமிழகத்தில் அண்ணா தலைமையிலான திமுக, காங்கிரசை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அப்புறப்படுத்தியது. 50 ஆண்டுகள் கடந்த நிலையில் காங்கிரசால் இன்னும் எழுந்து நிற்கவே முடியவில்லை.

இந்நிலையில், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக, தமிழகத்தில் காலூன்ற கடுமையாக போராடி வருகிறது.

ஆனால், இங்குள்ள பெரிய கட்சிகளான அதிமுக, திமுக மட்டுமல்ல, தேமுதிக போன்ற சிறிய கட்சிகள் கூட பாஜகவை தீண்ட தகாத கட்சியாகவே பார்க்கிறது.

அதேபோல், வட இந்திய பாணி அரசியல் இங்கு எடுபடாது என்று 50 ஆண்டுகளுக்கு முன்பே நிரூபிக்கப்பட்டு விட்டது.

பாஜக வின் கொள்கைகளை, தமிழக மக்கள் மனதளவில் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவர்களை ஏற்க வைக்கும் அளவுக்கு திறமையான தலைவர்களும் தமிழக பாஜக வில் இல்லை.

ஜல்லிக்கட்டு தொடங்கி எத்தனையோ விவகாரங்களில், மத்திய அரசின் நிலைப்பாடுகள் அனைத்தும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவே உள்ளது.

குறிப்பாக, ஜக்கி வாசுதேவ் விழாவுக்காக, கோவை வந்து சென்ற பிரதமர், இரண்டு வாரங்களுக்கு மேலாக தலைநகர் டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை சந்திக்க மறுத்து வருகிறார்.

இதைப்பற்றி கேட்ட செய்தியாளர், எச்.ராஜாவுக்கு, தேச துரோகியாக தெரிகிறார். ஹைட்ரொ கார்பன் திட்டத்திற்காக, தமிழகத்தை தியாகம் செய்ய சொல்கிறார் இல.கணேசன்.

பொன்னாரோ, மத்திய அரசின் திட்டங்களை ஏற்றால்தான், விவசாயிகள் பிரச்சினையை மத்திய அரசு தீர்க்கும் என்று பிளாக்மைல் செய்வது போல பேசுகிறார்.

இது கூட பரவா இல்லை. தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பாஜக, பிரமுகர்களோ, மத்திய அரசின் அணுகுமுறைகளுக்கு பரிந்து பேசும் வக்கீலாக மட்டுமேதான் செயல்பட முடிகிறது.

அல்லது எதிர் கேள்வி கேட்பவர்களை பேசவிடாமல், தடுப்பது, குறுக்கீடு செய்வது, இல்லையெனில் எழுந்து செல்வது ஆகியவற்றைதான் செய்ய முடிகிறது.

தமிழக கட்சிகளின் பிரமுகர்கள் எடுத்து வைக்கும் வாதங்களை, மக்கள் மன்றம் ஏற்கும் வகையிலான கருத்துக்களை எடுத்து வைத்து மறுத்து பேச, அவர்களிடம் எதுவும் இல்லை என்பது பலமுறை நிரூபணமாகிறது.

எனவே, தேசிய அரசியல் மற்றும் வட மாநில அரசியலில் வலம் வரும் பார்முலாக்கள் இங்கே செல்லுபடியாகாது என்பதை முதலில், பொன்னார் உள்பட, தமிழக பாஜக தலைவர்கள் உணர வேண்டியது காலத்தின் கட்டாயம்.