உடல் நலக்குறைவால் மரணமடைந்த திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உடல் காவேரி மருத்துமனையில் இருந்து முதலில் கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு  குடும்பத்தினர் , உறவினர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

karunanidhi dead க்கான பட முடிவு

பின்னர் கருணாநிதியின் உடல் சிஐடி நகரில் உள்ள கனிமொழி எம்.பி.யின் வீட்டுக்கு கொண்ட செல்லப்பட்டது. அங்கும் பல்லாயிரக்கணக்கானோர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து இன்று அதிகாலை 5.30 மணி அளவில் ஓமத்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலுக்கு உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும், தொண்டர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டதும், அவரது உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவர் மீது போர்த்தியிருந்த திமுக கொடி அகற்றப்பட்டு தேசிய கொடி போர்த்தப்பட்டது.

ராணுவ வீர்ர்கள் மிடுக்குடன் நடந்து வந்து மரியாதை செலுத்திய பின் தேசிய கொடியைப் போர்த்தினர். கருணாநிதி 5 முறை முதலமைச்சராகப் பணியாற்றி இருக்கிறார். அதையயொட்டி அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரது உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் இன்று மாலை அடக்கம் செய்யப்படவுள்ளது. எந்த இடத்தில் என்பது இன்று காலை 8.30 மணிக்கு நீதிமன்றம் முடிவு செய்யும்.