ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய சட்டப்பிரிவு 35ஏ மற்றும் 370 ஆகியவற்றை ரத்து செய்தது செல்லாது என்று அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தேசிய மாநாடு கட்சி எம்பிக்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகளை ரத்து செய்ததோடு, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தையும், குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவையும் செல்லாது என அறிவிக்கக்கோரி தேசிய மாநாடு கட்சி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தேசிய மாநாட்டு கட்சி எம்பிக்களான முகமது அக்பர் லோன் மற்றும் ஹஸ்னைன் மசூதி ஆகிய இருவரும் உச்சநீதிமன்றத்தில் நேற்று(சனிக்கிழமை) மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். 

அந்த மனுவில்,  அரசியலைப்பு சட்டத்தின் 370வது பிரிவில் சில அம்சங்களை நீக்கி, ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததோடு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டமும், அதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவும், அரசியலமைப்பு சட்டம் ஷரத்து 14 மற்றும் 21ன் கீழ் வழங்கும் அடிப்படை உரிமைகளை பறிப்பதாக அமைந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்களின் கருத்தை கேட்காமலேயே மத்திய அரசு இவ்வாறு செயல்பட்டிருப்பது அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயலாகவே அமைந்துள்ளது. எனவே ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் மற்றும் அச்சட்டத்துக்கு குடியரசுத்தலைவர் வழங்கிய ஒப்புதல் ஆகிய இரண்டையும் சட்டவிரோதமானது என்றும் செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும்.