ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட சத்யா நாதெள்ளா மைக்ரோசாப்ட் சி.இ.ஓவாக பிப்.2014 முதல் இருந்து வருகிறார்.
மான்ஹட்டனில் மைக்ரோ சாப்ட் சி.இ.ஓ. சத்யா நாதெள்ளா ஊடகங்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். 

அப்போது அவரிடம்  குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து கேள்வி  கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: இந்தியாவில் நடந்து கொண்டிருப்பதெல்லாம் வருத்தமளிக்கக் கூடியது. குடியுரிமைத் திருத்தச்சட்டம் மோசமானது. ஒரு வங்கதேசத்தவர் இந்தியாவில் குடியேறி இந்தியாவில் அடுத்த யூனிகார்னை தயாரிப்பதையோ இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆவதையோ நான் பார்க்க விரும்புகிறேன் 


எந்த ஒருநாடும் தன் எல்லைகளை வரையறை செய்து கொள்ள வேண்டும், செய்து கொள்ளும், அதன்படி தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யும், குடியேற்ற விதிமுறைகளை வகுக்கும். ஜனநாயக நாடுகளில் மக்களும் அரசுகளும் இது குறித்து விவாதித்து அந்த எல்லைக்குள் விளக்கமளித்துக் கொள்ளும்.


என்னுடைய இந்தியப் பாரம்பரியம், இந்தியப் பன்முகக் கலாச்சாரத்தில் வளர்ந்தது, அமெரிக்காவில் என்னுடைய குடிப்பெயர்வு அனுபவம் ஆகியவைதான் என்னை வடிவமைத்தது. குடியேறிய ஒருவர் இந்தியாவில் ஒரு தொழிலைத் தொடங்குவதையோ அல்லது ஒரு பன்னாட்டு நிறுவனத்தை தலைமையேற்று இந்தியச் சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பயனுள்ளதாக மாறுவதையோ நான் பார்க்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை  விமர்சனம் செய்த முதல் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவன அதிகாரி நாதெள்ள சத்யா என்பது குறிப்பிடத்தக்கது.