natham viswanathan about arukkuty mla

எடப்பாடி அணிதான் எம்எல்ஏக்களை நம்பியுள்ளது, ஆனால் ஓபிஎஸ் அணி தொண்டர்களை நம்பியுள்ளது என்று தெரிவித்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ஆறுக்குட்டி போனால் கவலையில்லை என கூறினார்.

சசிகலாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஓபிஎஸ் விலகி தனி அணி ஒன்றை தொடங்கினார். அவருக்கு 12 எம்எல்ஏக்களும், 10 எம்.பி.க்களும் ஆதரவு அளித்தனர்.

ஆனால் 122 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். இந்நிலையில் ஓபிஎஸ்க்கு ஆதரவு அளித்த முதல் எம்எல்ஏவான கவுண்டன்பாளையம் தொகுதி ஆறுக்குட்டி கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் அணியை குற்றம்சாட்டி வந்தார்.

தனக்கு ஓபிஎஸ் அணியினர் உரிய மதிப்பு அளிப்பதில்லை என குற்றம்சாட்டினார். நேற்று அவர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இன்று அவர் சேலத்தில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அவரது அணியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், எம்எல்ஏக்கள் மாறினாலும் தொண்டர்களிடம் ஓபிஎஸ் அணிக்குத்தான் ஆதரவு உள்ளது என தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி அணி எம்எல்ஏக்களையும் ஓபிஎஸ் அணி தொண்டர்களையும் நம்பி உள்ளது என நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.