“உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது அமைச்சர்கள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமாக உள்ளது." என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியிருந்தார்.
மு.க.ஸ்டாலினுக்கு பிறகு மக்கள் மத்தியில் வசீகரமான தலைவராக உதயநிதி உருவெடுத்துள்ளார் என்று தமிழக பாள் வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அமைச்சர்கள் வரிசையாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். உதயநிதியின் பிறந்த நாளையொட்டி அமைச்சர் அன்பில் மகேஷ்தான் இதை பற்ற வைத்தார். “உதயநிதி பிறந்த நாளில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “234 தொகுதிகளும் பயன்படும் வகையில் உதயநிதி ஸ்டாலின் மாறவேண்டும். நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களும், குறிப்பாக சேப்பாக்கம் தொகுதி மக்கள் நினைப்பது, எங்களுக்கு மட்டும் இவ்வளவு செய்யும்போது, அவர் உயரிய பதவிக்கு சென்றால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே பயனளிக்கும் என்ற எண்ணம் உள்ளது. உதயநிதி அடுத்தகட்டமாக அமைச்சராக வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இதே கருத்தை வலியுறுத்தி நான்கு தினங்களுக்கு முன்பும் அன்பில் மகேஷ் கருத்து தெரிவித்தார். ““உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது அமைச்சர்கள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமாக உள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவு எடுப்பார்.” என்று தெரிவித்தார். இதேபோல் ‘மேயர் பதவி வழங்கினாலும் உதயநிதி சிறப்பாகச் செயல்படுவார். அமைச்சர் பதவி கொடுத்தால் இன்னும் சிறப்பாக செயல்படுவார்” என்றும் அன்பில் மகேஷ் கூறியிருந்தார். இதனையடுத்து வணிக வரிஅமைச்சர் பி.மூர்த்தியும், உதய நிதியை அமைச்சராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மூத்த அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் பால்வளத் துறை அமைச்சர் நாசரும் இது பற்றி பேசியிருக்கிறார்.
இதுதொடர்பாக எஃப்.எம். ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலிலும் உதயநிதி ஸ்டாலினுடைய உழைப்பு அபாரமானது. மு.க.ஸ்டாலினுக்கு பிறகு மக்கள் மத்தியில் வசீகரமான தலைவராக உதயநிதி உருவெடுத்துள்ளார். அதனால், அவர் அமைச்சராவதில் என்ன தவறு?” என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
