தமிழ் இலக்கியத்தில் செங்கோல் என்று தான் உள்ளது; மாறாக இஸ்லாம், கிறிஸ்தவம் இல்லை - அண்ணாமலை விளக்கம்
தமிழ் இலக்கியத்தில் செங்கோல் என்ற வார்த்தை தான் உள்ளது. மாறாக இஸ்லாம், கிறிஸ்தவம் என்று இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டு கால சாதனை விளக்ககக் கூட்டம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், 1947ல் இருந்து தமிழகம் மற்றும் இந்தியாவில் பல்வேறு கட்சிகள் ஆட்சி புரிந்துள்ளன. அதில் கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசை உலக நாடுகளே பாராட்டுகிறது. 2014-ல் 11-வது பொருளாதார நாடாக இருந்த இந்தியா, தற்போது 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. இதற்கு பாரத பிரதமர் மோடியே காரணம். 220 கோடி கொரோனா தடுப்பூசி திட்டம் உட்பட பல்வேறு துறைகளில் இந்தியா சாதனை படைத்துள்ளது. முன்னொரு காலத்தில் விஐபி கையெழுத்து இருந்தால் மட்டுமே தடுப்பூசி போடப்படும்.
அனைத்து திட்டங்களையும் மக்கள் அறியும் வகையில் செல்போனில் அந்த வசதிகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. கடந்தாண்டில் 12,735 கோடி முறை டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை நடந்துள்ளது. டீக்கடையில் கூட செல்போன் மூலம் பணபரிவர்த்தனை கொண்டுவரப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் பெற குறிப்பிட்ட தொகையை இடை தரகர்களுக்கு தரும் நிலை தற்போது முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆண்டுகாலத்தில் தமிழகத்தில் 9 லட்சம் பேருக்கு பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 9 கோடி பேருக்கு இலவச காஸ் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் காஸ் விலை குறைக்கப்படும். முத்ரா கடன் திட்டம் வந்த பிறகு அரியலூர் மாவட்டத்துக்கு ரூ.1,512 கோடி கடன் வழங்கப்பட்டு பலரும் தொழில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது. கடன் வாங்குவது கூட தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளது. 1.54 லட்சம் பேர் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டபோது, மத்தியில் இருந்த காங்கிரஸிடம் எத்தனை அமைச்சர் சீட்டு வழங்கப்படும் என கேட்டவர் கருணாநிதி.
உலகம் முழுவதும் தமிழ் மொழியினை மோடி கொண்டு சென்றுள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அமெரிக்காவின் காலில் விழுந்து கொண்டிருந்தோம். ஆனால், தற்போது மாறிவிட்டது. உலகம் முழுவதும் இந்தியாவை மரியாதையுடன் பார்க்கிறது. திருக்குறளை உலகம் முழுவதும் மக்கள் படிக்க வேண்டும் என 23 மொழிகளில் மாற்றி பல்வேறு நாடுகளுக்கு கொடுத்துள்ளார். அந்த பிரதமரை பார்த்து தமிழ் விரோதி என கூறுகின்றனர். மண்ணின் கலாசாரம் தெரிவதால் தமிழ் மொழியை பிரதமர் தூக்கி நிறுத்துகிறார்.
சிபிஐயின் அடுத்த குறி முதல்வர் ஸ்டாலின்.. 200 கோடி விவகாரத்தை கிளப்பும் அண்ணாமலை - மீண்டும் பரபரப்பு
சோழசாம்ராஜ்யத்தினை அறிந்த பிரதமர் செங்கோலை கொண்டுவரச் செய்து, புதிய மக்களவை கட்டிடத்தில் சபா நாயகர் அருகே செங்கோலை வைத்து அழகு பார்க்கிறார். தமிழ் இலக்கியத்தில் செங்கோல் என்ற வார்த்தை உள்ளது. ஆனால், இஸ்லாமியம், கிறிஸ்துவம் என்ற வார்த்தை இல்லை. இதுகுறித்து புரிதல் இல்லாமல் எம்பி தொல்.திருமாவளவன் மக்களவையில் பேசுகிறார். திராவிட மாடல் ஆட்சியில் அரியலூர் மாவட்டம் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. இதுதான் அவர்களது சாதனை. இவற்றை மாற்ற சிதம்பரம் மக்களவை தொகுதியில் பாஜக அல்லது கூட்டணி கட்சி வேட்பாளர் போட்டியிட்டு வெல்வார். 2024-ல் 400 எம்பிக்களை வெற்றிப்பெறச் செய்து மோடி ஆட்சியமைப்பார்.
நீட் தேர்வில் தமிழகத்திலிருந்து அகில இந்திய அளவில் தமிழகத்தை சேர்ந்த மாணவன் முதலிடமும், 4 பேர் முதல் 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். அரசியல் செய்து, செய்து நீட் என்பதை பெரிய பூதமாக மாற்றிவிட்டனர். சாதாரண கூலித் தொழிலாளியின் பிள்ளைகள் மருத்துவ படிப்புகளுக்கு தற்போது செல்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.