Asianet News TamilAsianet News Tamil

கீழ்த்தரமான அரசியல் செய்யக்கூடாது... தமிழிசை சௌந்தரராஜனை விளாசிய நாராயணசாமி!!

தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்ய வேண்டும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சாடியுள்ளார். 

narayanasamy slams bjp and tamilisai soundararajan
Author
First Published Sep 14, 2022, 8:00 PM IST

தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்ய வேண்டும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சாடியுள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், ராகுல் காந்தியின் பாத யாத்திரையை சகித்துக்கொள்ள முடியாமல் அவர் அணிந்திருந்த டீ சர்ட் பற்றி பாஜகவினர் விமர்சித்துள்ளனர். அது திருப்பூரில் தயாரிக்கப்பட்ட டீசர்ட். பிரதமர் மோடி ஒரு நாளைக்கு 3 முறை உடை மாற்றுகிறார். அவை இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்காவில் இருந்து வருகின்றன. உள்துறை அமைச்சர் அமித்ஷா அணியும் ஆடைகளும் வெளிநாட்டிலிருந்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதாக கூறிக்கொண்டு தேசியக்கொடியை கூட சீனாவில் இருந்து இறக்குமதி செய்தனர். காங்கிரஸ் கட்சியை குறைகூற பாஜகவுக்கு எந்தவித தகுதியும் இல்லை. பாதயாத்திரை பற்றி ஆளுநர் தமிழிசை ஏளனமாகப் பேசியுள்ளார். நீண்ட நித்திரையில் இருந்தவர்கள் தேசத்தை ஒருங்கிணைக்க பாதயாத்திரை போவதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: “120 கோடியில் திருமணம்..ஜெயலலிதா போல ஜெயிலுக்கு போவார் அமைச்சர் மூர்த்தி - திகில் கிளப்பும் சவுக்கு சங்கர் !”

தெலுங்கானாவுக்குத்தான் அவர் ஆளுநர். அந்த மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர், அமைச்சர்கள் தொடங்கி அனைவரும் தமிழிசையை உதாசீனப்படுத்துகின்றனர். எனவேதான் புதுச்சேரியில் அதிக நாட்கள் தங்கியுள்ளார். ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் அரசியல் செய்யக்கூடாது. அவர் பாதயாத்திரையை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது. ஏதோ அவர் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது போல இருக்கிறது. அவர் டாக்டராக இருக்கலாம். ஆனால், அவர் ஒரு சிறந்த மனநல மருத்துவரைப் பார்த்து மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். தமிழிசை சௌந்தரராஜன் அரசியல் செய்ய விரும்பினால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யலாம். உயர்ந்த பதவியில் இருந்துகொண்டு கீழ்த்தரமான அரசியல் செய்யக்கூடாது. பிரதமர் மோடி பிறந்தநாளை மழைநீர் சேகரிப்பு வாரமாக கொண்டாட அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை மக்கள் போராட்டமாக மாற்றிய அன்சாரி: உளவுத்துறை ரிப்போர்ட் .. கையை பிசையும் ஸ்டாலின்

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி முதல்வர் ரங்கசாமி லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை உறிஞ்சும் 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார். இது பிரதமரின் பிறந்தநாளை கொச்சைப்படுத்துவது. இதில் ரூ.90 கோடி பணம் கைமாறியுள்ளது. இதை பாஜக எம்எல்ஏ சட்டசபையில் விமர்சித்துள்ளார். இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை கோரியுள்ளோம். இந்த விஷயத்தில் பாஜக தலைவர்களின் பதில் என்ன? பள்ளி, கல்லூரி பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்து. புதுச்சேரியில் ரவுடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கு முதல்வர் ரங்கசாமி அலுவலகம் ரவுடிகள் கூடாரமாக மாறியதுதான் காரணம். முதல்வர் அலுவலகத்திலேயே ரவுடிகள் இருந்தால் காவல்துறையினர் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios