காவிரி நதிநீர் பிரச்சனையைப் பொறுத்தவரை எங்கள் கட்சியின் மேலிடம் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை என்றும், எங்களுக்கு புதுச்சேரி மாநில விவசாயிகளின் நலன்தான் முக்கியம் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதே போல் புதுச்சேரியிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது புதுச்சேரி அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசினார், இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது கர்நாடகாவில் எங்களது காங்கிரஸ் கட்சியின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. ஆனாலும் காவிரி பிரச்சனையில் எங்களது மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இப்பிரச்சனையில் எங்களது கட்சி மேலிடம் குறித்து எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்தார். காவிரி மேலாண்டை அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும், இப்பிரச்சனையில் திமுகவுடன் இணைந்து போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

விவசாயிகளுக்காக புதுச்சேரி காங்கிரஸ் அரசு எதையும் செய்ய தயாராக இருப்பதாகவும் நாராயணநாமி தெரிவித்தார்.