புதுச்சேரியில் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த  முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

புதுச்சேரி அரசு கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டதாகவும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வரை புதுச்சேரியில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி,  புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், ஒருங்கிணைந்த கொரோனா தடுப்பு திட்டத்தை உருவாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், ஊரடங்குக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியும், உணவுப் பொருட்கள் வழங்க உத்தரவிட வேண்டும்எனவும் கோரப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு,  மத்திய உள்துறை செயலர், மத்திய சுகாதாரத்துறை செயலர், புதுச்சேரி தலைமைச் செயலர், வருவாய்த்துறை செயலர், சுகாதாரத் துறை செயலர், மாவட்ட ஆட்சியர், காரைக்கால் மாவட்ட ஆட்சியர், மாகி, ஏனாம் தலைமைச் செயல் அதிகாரிகள் 6 வாரத்திற்குள் பதில் அளிக்க உத்தரவிட்டது.