புதுவையில் கடந்த 11-ம் தேதி முதல் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என விதிமுறை அமல்படுத்தப்பட்டது. ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.

பொதுமக்கள் இந்த எச்சரிக்கையை புறக்கணித்ததால் 2 நாட்களில் 30 ஆயிரம் வாகன எண்கள் விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கோர்ட் மூலம் இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது என்ற தகவல் பொதுமக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முதலமைச்சர் நாராயணசாமி கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றார். இதனால் கவர்னர் மாளிகை அருகே சாலையில் போலீசார் தடுப்பு ஏற்படுத்தினர். அதை தாண்டி முதலமைச்சர்  மற்றும் அமைச்சர்களை செல்லவிடாமல் தடுத்ததால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

பின்னர் போலீசார் அவர்களை கவர்னர் மாளிகை வாசல் வரை அனுமதித்தனர். அங்கு முதலமைச்சர்  மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கவர்னர் மாளிகை அருகே பரபரப்பான சூழ்நிலையும், பதட்டமும் ஏற்பட்டது. 

போராட்டம் தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி பேசும்போது  கவர்னர் கிரண்பேடி இங்கு பதவி ஏற்றதில் இருந்தே அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வந்தார். எந்த பணியையும் செய்ய முடியவில்லை. 

கவர்னரால் புதுவை மாநிலமே ஒட்டுமொத்தமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் கடுமையாக பாதிக்கப் படுகிறார்கள். எனவே, வேறு வழி தெரியாமல் நாங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து 8 மணி நேரத்துக்கும் அதிகமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்