புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஹெல்மெட் அணியாமல் சென்றதால், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியிருந்த நிலையில், கிரண்பேடி ஹெல்மெட் அணியாமல் சென்ற படத்தைப் ட்விட்டரில் வெளியிட்டு பதிலடி கொடுத்திருக்கிறார் நாராயணசாமி.


புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் நாராயணசாமி வாகனப் பேரணியில் பங்கேற்றார். இந்தப் பேரணியில் தொண்டர்களுடன் பங்கேற்ற நாராயணசாமி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றார். இந்தப் படத்தை ட்விட்டரில் பதிவிட்ட கிரண்பேடி, “உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளையும் மோட்டார் வாகன சட்டத்தை முதல்வர் மீறியிருப்பதும் தெரிகிறது. அதனால் தவறு செய்தவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க புதுச்சேரி டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்சவாவிற்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.
கிரண்பேடியின் இந்தப் பதிவை அடுத்து, முதல்வர் நாராயணசாமி ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார். அந்தப் பதிவில் கிரண்பேடி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்லும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அதில், “பிறருக்கு உபதேசம் செய்யும் முன்பு, தான் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்” என நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார். அவரின் பதிவுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியுள்ளது. 
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். ஏற்கனவே இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவிவரும் நிலையில், தற்போது ஹெல்மெட் அணியாமல் சென்ற விவகாரத்தை வைத்து இருவரும் சண்டை போட்டுவருவது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.