டிடிவி.தினகரனை முதலமைச்சராக அமர வைப்பதே எனது கனவு என அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது.

"அதிமுகவை, பாஜக வழி நடத்துவதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. பாஜகவினரும் தமிழகத்தில் தாமரை மலரும் என கூறி கொண்டே இருக்கிறார்கள். தமிழகத்தில்தான் தண்ணீரே இல்லையே.. பிறகு எப்படி இங்கு தாமரை மலரும்...?

அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள், வீழ்ந்து போவார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அந்த வார்த்தை, ஓ.பன்னீர்செல்வத்தையே குறிக்கும். டிடிவி.தினகரனை பற்றி அவர் கூறவில்லை.

தினகரன் நியமித்த பொறுப்பாளர்களை, அந்த பதவிகளை ஏற்க வேண்டாம் என கூறி, அமைச்சர் உதயகுமார் வற்புறுத்தி வருகிறார். இதுபோன்ற செயலில் அவர் ஈடுபடுவது, கண்டிக்கத்தக்கது. இதுபோன்று தவறாக பேசுவதை முதல்வர் தடுக்க வேண்டும்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறித்து, சிங்கப்பெருமாள் கோயிலில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். இதுபோன்று அவர் பேசி இருக்க கூடாது.

தினகரன் கட்சியில் இல்லை. அவருக்கு எந்த பொறுப்பும் இல்லை என அமைச்சர் ஜெயகுமார் கூறி வருகிறார். டிடிவி.தினகரனால் தான் இன்று ஆட்சி நடக்கிறது என்பதை அவர்கள் மறந்து பேசுகிறார்கள். விரைவில், டிடிவி.தினகரன் முதல்வராக உட்காருவார். டிடிவி.தினகரனை முதலமைச்சராக அமர வைப்பதே எனது கனவு"

இவ்வாறு அவர் கூறினார்.