Nanjil Sampath criticizing BJP H Raja

வைரமுத்துவை ஆண்டாள் மன்னித்துவிட்டார்; ஆண்டாளை அறியாத சண்டாளர்கள், தமிழ்நாட்டில் எப்படியாவது கலகத்தை மூட்டி, கால் ஊன்றுவதற்கு போடும் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த நாடகம் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் ஆவேசமாக கூறியுள்ளார்.

தினமணி நாளிதழ் சார்பில், ராஜபாளையத்தில் இலக்கிய விழா ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஆண்டாள் குறித்து, கவிஞர் வைரமுத்து கட்டுரை ஒன்றை படித்தார். அந்த கட்டுரையில் வெளிநாட்டு ஆய்வாளரின் கருத்தை மேற்கோள் காட்டி, வைரமுத்து பேசியது பெரும் சர்ச்சையை எழுப்பியது. 

வைரமுத்துவுக்கு எதிராக இந்து அமைப்புகளும், வைணவர்களும், போராட்டங்கள் நடத்தினர். வைரமுத்துவும், தினமணி நாளிதழ் ஆசிரியர் வைத்தியநாதனும் ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆண்டாள் பேச்சு குறித்து கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனாலும், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, வைரமுத்துவை மிகவும் இழிவாக கூறியுள்ளார். 

ஹெச்.ராஜாவுக்கு எதிராக பல்வேறு தரப்பினர், கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

கவிஞர் வைரமுத்து விவகாரம் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ஹெச்.ராஜாவால், வைரமுத்துவின் உயரத்தை எட்டிப்பிடிக்க முடியுமா? என்றார். ஹெச்.ராஜா நாவடக்கம் இல்லாமல் பேசுகிறார். ஏற்கனவே, வைரமுத்துவை ஆண்டாள் மன்னித்துவிட்டார். ஆண்டாளை அறியாத சண்டாளர்கள், தமிழ்நாட்டில் எப்படியாவது ஒரு கலகத்தை மூட்டி, கால் ஊன்றுவதற்கு போடும் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த நாடகம் என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.