ஹோட்டலுக்கு சாப்பிட வந்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் அவரை தாக்க முயன்றனர். இதையடுத்து அங்கு வந்த அதிமுகவினர் சம்பத்தை பத்திரமாக மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றனர். அவரது கார் பாஜகவினரால் கல் வீசி தாக்கப்பட்டு சேதமடைந்தது.

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைந்த பிறகு சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை அதிமுகவில் இருந்து நீக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள், இந்த இணைப்புக்கு காரணம் பாஜக தான் என்றும், தற்போது அரசை இயக்கி வருவதும் பாஜக தான் என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டவர்களை மிகக் கடுமையாக குற்றம் சாட்டினார்.

நாஞ்சில் சம்பத்தின் இந்த பேச்சால் ஆத்திரமடைந்த பாஜகவினர், அவர் நேற்று மாலை ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றபோது முற்றுகையிட்டு தாக்க முயன்றனர்.

இதையடுத்து அங்கிருந்த டி.டி.வி.தினகரன் ஆதரவு தொ,ணடர்கள், நாஞ்சில் சம்பத்தை பத்திரமாக மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தின்போது நாஞ்சில் சம்பத்தின் கார் மீது கல் வீசப்பட்டதால் சேதமடைந்தது.