nanjil sampath and pugazhendhi having faith on dinakaran
கடந்த 30 ஆண்டுகளாக கட்சியிலும், ஆட்சியிலும், தினகரன் தயவால் முக்கிய பதவிக்கு வந்தவர்களின் பட்டியல் மிக நீளமானது. அதில் பலர் இன்னும் வலுவான பதவியில் இருக்கின்றனர்.
ஆனாலும், கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள தினகரனுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை கூட பேசாதவர்களே அதிகம். குறிப்பாக, தினகரன் சமூகத்தை சேர்ந்தவர்கள் மிகவும் அதிகம்.
ஆனால், அதிமுக தலைமை நிலைய பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பெங்களூரு புகழேந்தி ஆகியோர் மட்டுமே, தினகரனுக்கு ஆதரவாக இன்று வரை குரல் கொடுத்து வருகின்றனர்.

இவர்கள் இருவருமே, தினகரனின் சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல. அதேபோல் அவரது தயவால் அமைச்சர் பதவி வகித்தவர்களும் அல்ல. ஆனால் தினகரனின் உண்மையான விசுவாசியாக திகழ்ந்து வருகின்றனர்.
டெல்லி போலீசார், விசாரணைக்காக தினகரனை இன்று காலை சென்னை விமான நிலையம் அழைத்து வந்தபோது, அங்கு சென்று அவரை சந்திக்க முடியாமல் திரும்பியதும் இந்த இருவர்தான்.
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்த பொது, அவர்களுக்காக ஜாமீன் கொடுத்தவர் தான் புகழேந்தி.
புகழேந்தி நாயுடு சமூகத்தை சேர்ந்தவர். பூர்வீகம் கடலூர் என்றாலும், பெங்களூரில் செட்டில் ஆகி, கர்நாடக மாநில அதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.
நாஞ்சில் சம்பத் இல்லத்து பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர். சசிகலா தலைமையை எதிர்த்து ஆரம்பத்தில் குரல் கொடுத்தாலும், பின்னர் அதை ஏற்றுக் கொண்டவர்.
இன்று வரை, தினகரனுக்காக, ஊடகங்களிலும் பொது வெளியிலும் நாஞ்சில் சம்பத்தே தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

நாஞ்சில் சம்பத், புகழேந்தி ஆகிய இருவருமே எம்.எல்.ஏ வோ, அமைச்சர்களோ அல்ல. ஆனாலும் தினகரனை மனதளவில் ஏற்றுக் கொண்டவர்கள். அதனால் அந்த விசுவாசம் தொடர்கிறது.
ஆனால், தினகரனால் எம்.எல்.ஏ, எம்.பி., அமைச்சர், முதலமைச்சர் போன்ற பதவிகளை பெற்ற அனைவரும், தங்கள் பதவி பறி போய் விட கூடாது என்பதிலேயே கவனமாக இருக்கின்றனர்.
ஆகவே, பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி இருந்தாலும், தினகரனுக்கு நெருக்கடியான நேரத்திலும் ஆதரவாக இருக்கும், நாஞ்சில் சம்பத், புகழேந்தி ஆகியோரின் விசுவாசத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.
அதேபோல், சசிகலா எதிரில் செருப்பு கூட அணியமாட்டேன் என்று கூறி, பின்னர் பன்னீரே விசுவாசத்தின் அடையாளம் என்று கூறிய அமைச்சர் உதயகுமாரையும் இந்த நேரத்தில் நினைவுகூர வேண்டியது அவசியம்.
