ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் அ.தி.மு.க.விலிருந்து உடைக்கப்பட்ட தினகரனின் கட்சிக்குள் நுழைந்தார் நாஞ்சில் சம்பத். சென்றவர் சும்மா இல்லை. வெளுத்தெடுத்து, விமர்சனங்களில் விளாசித் தள்ளினார் அ.தி.மு.க.வின் மிக மிக முக்கிய நிர்வாகிகளை.  அதிலும் குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தை அவர் திட்டிய திட்டெல்லாம் எந்த ஜென்மத்திலும் மறக்கவே முடியாத வார்த்தைகள். அ.தி.மு.க.வுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தார். ’இவரை மட்டும் தூக்கிட்டு வந்துட்டால் அந்த கட்சியின் ஆர்ப்பரிப்பு கொஞ்சம் அடங்கிடும்’ என்று பேசினார்கள் ஆளுங்கட்சியின் முக்கிய தலைகள்.  ஆனால் அவர்களுக்கு அந்த ரிஸ்க்கையெல்லாம் கொடுக்காமல், நாஞ்சிலே தினகரனை விட்டு கழன்று கொண்டார். காரணம், தினகரன் தன் கட்சிக்கு ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என பெயர் வைத்தார்.

’கட்சியில் பெயரில் திராவிடம் இல்லை. திராவிடம் இல்லாத கட்சியில் ஒரு நொடியும் இருக்க மாட்டேன்! மற்றபடி எனக்கு தினகரனுடன் எந்த பிணக்கும் இல்லை.’ என்றபடி வெளியேறினார்.  தினகரனும் ‘சரி வெளியில போயி தன் வேலையை பார்த்தால் ஓ.கே. நமக்கு குடைச்சல் கொடுக்காமல் இருக்குற வரைக்கும் பிரச்னை இல்லை.’ என்றுதான் நினைத்தார்.  ஆனால் வெளியே வந்த நாஞ்சிலோ சைக்கிள் கேப் கிடைத்தாலும் அதில் தினகரனுக்கு எதிராக லாரியே ஓட்டினார். வித விதமான விமர்சனங்களில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார் தினகரனை. அவற்றில் சமீபத்தில் அவர் தந்திருக்கும் பேட்டியில் போட்டுப் பொளந்திருப்பது ஓவர் டோஸ்தான். அது இப்படி போகிறது....
“ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் அ.ம.மு.க. நிறைய இடங்களில் வென்றிருப்பதாக சொல்லப்படும் தகவல்கள் பொய்யானவை. இப்போது 6-வது இடத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இனி 60-வது இடத்தை நோக்கி சரிந்து போவார்கள். இதையெல்லாம் வைத்து அக்கட்சியால் எதிர்கால அரசியலில் பயணிக்கவே முடியாது. ஒரு கட்சிக்கு கொள்கை என்று ஒன்று இருந்தால்தானே அது அரசியலில் வளர்ச்சி எனும் நிலையை அடைய முடியும். 


தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் பிரச்னைகளில் அக்கட்சி என்ன நிலைப்பாடு கொண்டிருக்கிறது? ஒண்ணும் கிடையாது. ச்சும்மா முழித்துக் கொண்டு திரிகிறார்கள். 
அரசியல் கொள்கைகள், நாட்டின் நிலை பற்றிய கருத்துக்கள் எதுவும் தெரிவிக்காமல் வெறும் மேனா மினுக்கியாக வலம் வரும் தினகரனோ, ஒரு கும்பலைக் கூட்டி வைத்துக் கொண்டு குளிர் காய கூடிய கேவலமான அரசியலைச் செய்து வருகிறார். இவரையெல்லாம் மக்கள் ஏத்துக்கவே மாட்டாங்க.” என்று வகுந்தெடுத்திருக்கிறார். 
மிஸ்டர் வெற்றிவேல் இதுக்கு உங்களோட சரவெடி பதிலை எதிர்பார்க்கிறோம் பாஸ்!