இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நாங்குநேரியில் தேர்தல் விதிமுறைகளை மீறி தொகுதிக்குள் நுழைய முயன்ற கன்னியாகுமரி எம்.பி.,யான வசந்தகுமாரை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதற்காக வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர். இதனிடையே, தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வெளியூர் நபர்கள் இருக்ககூடாது என்பது தேர்தல் விதி முறையாகும். 

இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளே நுழைய முயன்ற கன்னியாகுமரி எம்.பி.,யான வசந்தகுமாரை விசாரணைக்காக நாங்குநேரி காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

பின்னர், வெளியில் வந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நாங்குநேரியில் பரபரப்புரை செய்தால் என்னை கைது செய்யலாம். ஆனால், பாளையங்கோட்டையில் உள்ள என் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது நாங்குநேரி தொகுதிக்குள் நுழையக்கூடாது என போலீசார் தடுத்தனர். நான் ரோட்டில் தான் செல்கிறேன், தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளவில்லை. ஜனநாயக நாட்டில் எம்.பி.,யான எனக்கு ரோட்டில் செல்லக்கூட உரிமை இல்லையா என வசந்தகுமார் ஆவேசத்துடன் கூறினார். நாங்குநேரியில் பிற்பகல் 3 மணியளவில் 52.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.