கொடைக்கானலில் தேசம் காக்க இணைவோம் என்ற தலைப்பில் பாஜக சார்பில் நடைபெற்ற நிக‌ழ்ச்சியில் க‌ல‌ந்து கொள்ள வந்த வேலூர் இப்ராகிமை எதிர்த்து நாம்த‌மிழ‌ர் கட்சியினர் ம‌ற்றும் த‌முமுக‌வின‌ர் க‌ல்வீசி தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. 

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் பாஜக கட்சியினர் தேசம் காக்க இணைவோம் என்ற தலைப்பில் நிக‌ழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதில் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர் வேலூர் இப்ராகிம் கலந்து கொண்டார். வேலூர் இப்ராஹிம் பேச‌ ஆர‌ம்பித்த‌வுட‌ன் பிரதமர் மோடியின் திட்டங்களையும், நாட்டின் வளர்ச்சியையும் எடுத்துரைத்தார். அப்போது அங்கு வந்த தமுமுக மற்றும் நாம்தமிழர் கட்சியினர் இணைந்து வேலூர் இப்ராகிமை ம‌க்க‌ள் புறக்கணிக்க‌ வேண்டும், இனி எந்த மேடையிலும் பேச‌க்கூடாது, இப்ராகிம் ஒரு இன துரோகி என்றும், மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவதாகவும் கோஷம் எழுப்பி கல் வீசி தாக்கினர். 

அதைத் தொடர்ந்து வேலூர் இப்ராகீமை கைது செய்ய வேண்டும் என கூறி சாலை ம‌றியலிலும்  ஈடுபட்டனர். மேடையில் பேசிய வேலூர் இப்ராகிமை தாக்க முயன்றதை தொட‌ர்ந்து நாம்த‌மிழ‌ர் ம‌ற்றும் த‌முமுக‌  கட்சியின‌ருக்கும் காவல் துறையினருக்கும் இடையை தள்ளு முள்ளு ஏற்ப‌ட்ட‌து. அத‌னை தொட‌ர்ந்து பிஜேபியின‌ர் வேலூர் இப்ராஹிமை மூஞ்சிக்க‌ல் ப‌குதியில் உள்ள‌ பாதுகாப்பான‌ அறைக்கு வேகவேகமாக கூட்டிச் சென்றனர். இதனை தொடர்ந்து உட‌ன‌டியாக கொடைக்கான‌லில் இருந்து வேலூர் இப்ராகிம் வெளியேற‌வேண்டும் என‌ தமுமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர்  சாலை மறியலில் ஈடுபட்ட‌தால்  மூஞ்சிக்க‌ல் பிர‌தான‌ சாலையில் போக்குவ‌ர‌த்து பாதிக்கப்பட்டது. இந்த மோதல் சம்பவத்தால் அங்கு சில மணி நேரம் ப‌ர‌ப‌ர‌ப்பு நிலவியது. 

இந்த‌ க‌ல்வீச்சில் பாதுகாப்புப்ப‌ணியில் ஈடுப‌ட்டிருந்த‌ காவ‌லர் ஒருவ‌ருக்கு த‌லையில் காய‌ம் ஏற்ப‌ட்டு அவர்  ம‌ருத்துவ‌ம‌னையில் அனும‌திக்க‌ப்ப‌ட்டுள்ளார்.  மேலும் கல்வீச்சு மற்றும் சாலைமறியலில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து  பின்னர் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து பின்னர் விடுவித்தது குறிப்பிடதக்கது.