Asianet News Tamil

நிலத்தைக் காக்கும் இந்தப் போராட்டத்தில் நாம் வென்றாக வேண்டும்..!! நைஜீரியப் போராளி பாணியில் சீமான்..!!

நிலத்தைக் காக்கும் இந்தப் போராட்டத்தில் நாம் வென்றாக வேண்டும். இல்லையேல், நாம் கொல்லப்படுவோம். ஏனெனில், தப்பியோடுவதற்கு நமக்கு வேறு நிலங்களில்லை’

namtamilar party seeman statement regarding starlight factory
Author
Chennai, First Published May 22, 2020, 3:56 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

மக்களின் உணர்வுக்கும், மண்ணின் நலனுக்குமெதிரான பேரழிவுத்திட்டங்களை அகற்றுவதற்குத் தனிச்சட்டமியற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்டத்தை வன்முறைக்களமாக மாற்றி அதில் தன்னெழுச்சியாகப் பங்கேற்ற உழைக்கும் மக்களில் 12 பேர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டும், மூன்று பேர் காவல் துறையின் கொடூரத் தாக்குதலுக்கும், ஒரு பெண்மணி பேருந்தில் பற்றிய தீயில் பலியாகியும், பலர் உடல் உறுப்புகளை இழந்தும், நூற்றுக்கணக்கானோர் காயமுற்றும் இன்றோடு இரண்டு வருடமாகிறது.  ‘நிலத்தைக் காக்கும் இந்தப் போராட்டத்தில் நாம் வென்றாக வேண்டும். இல்லையேல், நாம் கொல்லப்படுவோம். ஏனெனில், தப்பியோடுவதற்கு நமக்கு வேறு நிலங்களில்லை’ எனும் நைஜீரியப் போராளி கென் சரோ விவாவின் கூற்றுக்கிணங்க, மண்ணின் நலனுக்காகவும், தங்களின் பாதுகாப்பான வாழ்நிலைக்காகவும், சுவாசிக்கச் சுத்தமான காற்றுக்காகவும் தற்காப்பு நிலமீட்புப்போராட்டத்தை முன்னெடுத்த மண்ணின் மக்களை மத்திய பாஜக அரசின் துணையோடு மாநில அதிமுக அரசு சுட்டுக்கொலை செய்தது அப்பட்டமான சனநாயகத்துரோகம்; 

அடிமை இந்தியாவில் நடந்தேறிய ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஒத்த அரசப்பயங்கரவாதம். ‘நிலமென்பது அடுத்தத் தலைமுறைக்கானது; நீரென்பது அனைத்து உயிர்களுக்குமானது’ எனும் இயற்கையின் இயக்கவியல் கோட்பாட்டை முற்றாகத் தகர்த்து, வரம்பற்றச் சுரண்டலும், கட்டற்ற நுகர்வும் மேற்கொள்ளும் வகையிலாகத் தொழிற்கொள்கையும், பொருளாதாரக் கொள்கையும் வகுக்கப்பட்டுள்ள இந்நாட்டில் வளர்ச்சித்திட்டங்கள் எனும் பெயரில் அனுமதிக்கப்படும் பேரழிவுத்திட்டங்களைத் தடுத்து நிறுத்த போராட வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் தலையாயக் கடனாகிறது. ஆகவேதான், நிலமும், வளமும் ஒருங்கே செழிக்கப்பெற்ற தமிழகத்திலுள்ள கனிமங்களையும், இயற்கை கொடையாகத் தந்தருளிய நதிகளையும், மலைகளையும், நிலங்களையும் கபகளீரம் செய்யும் மத்திய, மாநில அரசின் பேரழிவுத்திட்டங்கள் யாவற்றையும் மண்ணின் மக்கள் எதிர்த்துப் போர்க்களம் புகுகிறார்கள். மீத்தேன் காற்று எடுத்தல், ஹைட்ரோகார்பன் எடுத்தல், கெயில் எரிகாற்று குழாய் பதித்தல், அணு உலை, அணுக்கழிவு மையம், நியூட்ரினோ மையம், எட்டுவழிச்சாலை, உயர் மின்னழுத்த கோபுரம் அமைத்தல் என நீளும் இவையாவும் தமிழகத்தின் நிலவியல் மீது மத்திய, மாநில அரசுகள் தொடுத்துள்ள போராகும். 

தேசம் காக்கும் இப்பெரும் போரில் ஈடுபட்டு, தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று தங்களின் உயிரைத் துறந்த 16 போராளிகளின் உயிரீகம் வரலாற்றில் எந்நாளும் நினைவுகூறத்தக்கது. வாக்குச்செலுத்தி ஒற்றை விரல்மை மூலம் ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களையே அவ்வதிகாரத்தைக் கொண்டு சுட்டுப்படுகொலை செய்துவிட்டு, அவர்களைச் சமூக விரோதிகள் எனக் கட்டமைத்து கடந்து செல்ல முற்படும் இக்கொடுங்கோல் ஆட்சியாளர்களின் கொலைப்பாதகச் செயலானது என்றென்றும் நீங்காத பழிச்சொல்லாக நிற்கும். 16 பேரின் உயிரைக் குடித்திட்ட அப்படுகொலைக்குக் காரணமானவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததின் மூலம், அக்கொலைகள் முழுக்க ஆளும் வர்க்கத்தின் கண்ணசைவுக்கேற்ப நடைபெற்றவை என்பது தெளிவாகப் புலனாகிறது. ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ எனும் உலகப் பொது மறையோன் வள்ளுவப்பெருமகனாரின் கூற்றுக்கிணங்க, ஆட்சியதிகாரம் தந்த மமதையிலும், ஆணவத்திமிரிலும் அடித்தட்டு உழைக்கும் மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, தனிப்பெரு முதலாளிகளின் நலன் காக்க நடந்தேறிய இப்படுகொலைகள் அவ்வதிகாரத்தையும், அதனை நிகழ்த்திய ஆட்சியாளர்களையும் வீழ்த்தியே தீரும் என்பது எவராலும் மறுக்கவியலா பேருண்மை. 

பேரழிவுத்திட்டத்திற்கெதிராகப் போராடி போர்க்களத்தில் மாண்ட 16 உயிர்களையும் நினைவில் சுமந்து அவர்களுக்குக் கண்ணீர் வணக்கம் செலுத்துகிற இவ்வேளையில், மண்ணின் நலனுக்கெதிராகவும், மக்களின் உணர்வுக்கெதிராகவுமான நாசகாரத்திட்டங்களை அகற்றுவதற்குத் தனிச்சட்டமியற்றப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

Follow Us:
Download App:
  • android
  • ios