Asianet News Tamil

எடப்பாடியார் மீது இந்த அளவிற்கு நம்பிக்கை வைத்த சீமான்...!! கோபம் கொப்பளிக்க வந்த வார்த்தை..!!

500 கடைகளை முதற்கட்டமாக மூடினார். அவரது வழியில் செயல்படுவதாகக் கூறும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி வரலாற்றில் இடம்பெறுவதற்கான அரிய வாய்ப்பை நழுவ விட்டுவிட்டதாகவே தோன்றுகிறது. 

namtamilar party seeman demand tamilnaduu cm edapadi palanichamy
Author
Chennai, First Published May 8, 2020, 4:34 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறைகளின் நலவாழ்வினைப் பாதிக்கும் மதுக்கடைகளைப் படிப்படியாக மூடி, முழு மது விலக்கினை அமல்படுத்த முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,  அரை நூற்றாண்டுகளாய் தமிழகத்தின் மூலைமுடுக்களிலெல்லாம் புரையோடிப்போய் எண்ணற்ற உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவைவிடக் கொடிய மது எனும் உயிர்க்கொல்லியை அரசு மீண்டும் திறந்திருப்பது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று ஒரு நாள் மதுகடைகளைத் திறந்ததற்கே பல விபத்துகளும், சோக சம்பவங்களும் இன்றைய செய்தித்தாள் எங்கும் நிறைந்திருக்கிறதை கண்டு மனம் பதை பதைக்கிறது.  

அதிலும் சமூகவிலகளைச் சிறிதும் கடைபிடிக்காமல் மதுக்கடை வாசல்களில் கூட்டம் முன்னடியடித்து அலைமோதுவதைப் பார்க்கையில் 'மதுவை விற்று வருமானம் ஈட்டுவது குஷ்டரோகியின் கையிலிருக்கும் தேனை நக்கிச் சுவைப்பதற்கும் ஒப்பாகும்' என முழக்கமிட்ட பேரறிஞர் அண்ணாவின் வழிவந்த இருபெரும் திராவிடக் கட்சிகளும் மாறி மாறி ஆண்டு தமிழகத்தில் பல்லாயிரம் குடி நோயாளிகளை உருவாக்கி வைத்திருப்பதைத்தான் காட்டுகிறது.பல மாநிலங்களில் தனியார் முதலாளிகள் நடத்தும் மதுபானக்கடைகளிலிருந்து அரசுக்குக் குறிப்பிட்ட விழுக்காடு வருமானம் வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் அரசின் முதன்மைத் தொழிலாகவே மதுபானக்கடைகள் நடத்துதல் விளங்குகிறது. மதுபானங்களின் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தையே அரசின் முக்கிய வருமானமாக ஆட்சியாளர்கள் கருதுவது ஆகப்பெருங்கொடுமை. 

மாநில அரசின் முக்கிய வருமானமாக நில வரி, வேளாண்மை வர , சொத்துவரி, விற்பனை வரி, கேளிக்கை வரி, சுங்க வரி, சாலைப் போக்குவரத்து வரி, மதிப்புக்கூட்டு வரி, தொழில் வரி, முத்திரைத்தாள் வரி மற்றும் இன்னும் பிற வரிகள் என எத்தனையோ வரிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட அரசுக்கு மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருமானம் பெரிதாகப்படுகிறதா? அரசு நடத்த வேண்டிய மருத்துமனைகளும், கல்விக்கூடங்களும் தனியார்வசம் உள்ளன. தனியார் நடத்த வேண்டிய மதுபானக் கடைகளை அரசு நடத்துகின்றது. இதனைவிட நிர்வாகச் சீர்கேடு ஒன்றுண்டா? மக்கள் நலனுக்காகத் தான் மதுக்கடைகளைத் திறக்கிறோம் என்று அமைச்சர் பெருமக்கள் பேட்டி தருகின்றனர். எந்த மக்கள் நலனுக்காக என்று தான் தெரியவில்லை? இதனைக் கடந்த பத்தாண்டுகளாக நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வலியுறுத்தியும், அதற்காகப் போராடியும் வருகிறது. 

நீதிமன்றமும் , பெண்களும்கூடப் பல்வேறு இடங்களில் மதுக்கடைகளை மூடச்சொல்லி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். அந்தத் தொடர் கோரிக்கைகள் தந்த அழுத்தத்தின் காரணமாகத்தான் முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதாவும் மதுக்கடைகளைப் படிப்படியாக மூடுவதற்கான அறிவிப்பை தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்து, அதன்படி 500 கடைகளை முதற்கட்டமாக மூடினார். அவரது வழியில் செயல்படுவதாகக் கூறும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி வரலாற்றில் இடம்பெறுவதற்கான அரிய வாய்ப்பை நழுவ விட்டுவிட்டதாகவே தோன்றுகிறது. கடந்த 40 நாட்களாகத் தமிழகத்தில் தொடர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள்கூட மதுவை மறந்து, அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்தனர். தமிழக மக்களிடம் மதுக்கடைகளை மூடியதற்கு வரவேற்பும், நிரந்தரமாக மூடவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் மேலெழுந்த வேளையில் யாருமே கோரிக்கை வைக்காத நிலையில். 

மாநில அரசு தன்னிச்சையாக, அதுவும் ஊரடங்கு முடிவடையும் முன்னரே மதுக்கடைகளைத் திறப்பது என்ற முடிவை வெளியிட்டது அனைத்துத் தரப்பு மக்களிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாரோ ஒரு சில தனியார் முதலாளிகளின் இலாபத்தை மட்டுமே மனதில்கொண்டு ஒட்டுமொத்தத் தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறைகளின் நல்வாழ்வினையே குழிதோண்டிப் புதைக்கும் வகையிலான மதுக்கடைகளைத் திறக்கிற முடிவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.மதுக்கடைகள் தொடர்ந்து செயல்பட்டால், கடந்த நாற்பது நாட்களுக்கும் மேலாக மருத்துவர்கள், காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப்பொறியாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரை ஒருங்கிணைத்து தமிழக அரசு முன்னெடுத்த சிறப்பான கொரோனோ நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கான கடுமையான உழைப்பையும் , அர்ப்பணிப்பையும் கேலிக்கூத்தாக்கும் செயலாக அது அமைந்துவிடும் என்றும், அது மாநில அரசுக்கு மிகப்பெரிய அவப்பெயரையும் ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்கிறேன்.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios