namathu amma daily would be launched on jayalalitha birthday feb 24
ஜெயலலிதா பிறந்த நாளில் உதயமாகிறது... ‘ நமதுஅம்மா’ நாளிதழ்..!தற்போது, அதிமுக., வில் பிளவு ஏற்பட்டு கட்சியில் குழப்ப நிலை நிலவுகிறது. கட்சியின் சின்னமான இரட்டை இலையும், கட்சி அலுவலகமும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இணைந்துள்ள அணியின் வசம் உள்ளன. இதனால், கட்சி தொடர்பான நடவடிக்கைகளில் அவர்களே முன்னின்று நடத்தி, கட்சி விரோத நடவடிகைகளில் ஈடுபடுபவர்கள் என்று தினகரன் ஆதரவு உறுப்பினர்களை, தொண்டர்களை கட்சியை விட்டு நீக்கி வருகின்றனர்.
கட்சியின் அலுவலகம், கட்சி தங்கள் கைகளில் இருந்தாலும், கட்சி தொடர்பான ஊடகங்கள் எல்லாம், சசிகலா குடும்பத்தினர் வசம் உள்ளது. அதிமுக.,வின் அதிகாரபூர்வ நாளேடு நமது எம்.ஜி.ஆர்., அதிகாரபூர்வ தொலைக்காட்சி என ஜெயா டிவி ஆகியவை இருந்தன. இந்நிலையில் கட்சியில் கண்ட பிளவின் காரணத்தால், ஊடகங்களின் பலம் இல்லாமல் கட்சி திண்டாடுகிறது என்று எடப்பாடி, ஓபிஎஸ் உள்ளிட்டோர் யோசித்து வருகின்றனர்.
கட்சியினரும் அதைப் போன்ற மன நிலையில் இருப்பதால், கட்சியின் கொள்கைகளை விளக்க ஒரு டிவி., யும், நாளிதழும் அவசியத் தேவை என்பதை அதிமுக.,வினர் உணர்ந்தனர். இதன் காரணத்தால், நமது எம்ஜிஆர். போல், நமது அம்மா என்ற பெயரில் நாளிதழும், டிவியும் தொடங்கப் பட வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். அதன்படி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் வெளிவருகிறது நமது அம்மா நாளிதழ்.
முதற்கட்டமாக, ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ல் நமது அம்மா நாளிதழ் அதிமுக நாளிதழாக வெளிவரும் என்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
