சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய கமல்ஹாசனை நமது அம்மா நாளேடு கடுமையாக விமர்சித்துள்ளது. 

அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தின் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று தெரிவித்தார். கமலின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர் கடும் கண்டத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் சென்னை மற்றும் அரவக்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதிமுகவின் நமது அம்மா நாளேடு கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் பொலிகாளைக்குப் புரியுமோ புனிதமிக்க இந்து தர்மம் என்று தலைப்பிட்டு, தனது மகளுக்கு கன்னத்தில் முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டு கமல் குறித்து தரங்கெட்ட வகையில் கட்டுரை வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய விடுதலைக்குப் பிறகு இந்துதான் முதல் தீவிரவாதி இந்துதான் என்று உளறல் நாயகன் காமஹாசன் உலகின் மூன்றாம் பெரிய சமயத்தை இழிவுபடுத்தி இருக்கிறார். என்ன செய்வது... முடிந்துபோன தனது கலையுலக வாழ்வை அரசியலை வைத்து சமன் செய்துகொள்ள அவர் செய்து வரும் பைத்தியக்காரத்தனங்களுல்  ஒன்றுதான் இந்த தரங்கெட்ட பேச்சும். தனி ஒருவரின் தவறை மதத்தின் தவறாக சித்தரிப்பது என்றால் குடும்பத்தோடு சென்று பார்ப்பதற்கு ஏதுவாக இருந்த தமிழ் சினிமாவை வெறும் சதைக்களனாக மாற்றிய இந்த சண்டாளனை என்னவென்று சொல்வது? தன்னை வைத்துப் படம் எடுத்த ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களையும் ஓட்டாண்டி ஆக்கிய இந்த காமஹாசனை எப்படி விமர்சிப்பது? 

ஒரு படத்தில் கடவுளை விமர்சிப்பது, இன்னொரு படத்தில் சைவத்துக்கும் வைணவத்துக்கும் இடையே சண்டை மூட்டி விடுவது அடுத்த படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல் சித்தரிப்பது என்று மக்களிடையே சிண்டு முடிந்தே தன் பிழைப்பை ஓட்ட நினைக்கும் இந்த மனநோயாளியின் மக்கள் அநீதி மய்யத்தை தேர்தல் ஆணையம் உடனே தடை செய்யவேண்டும்.

இந்து மதத்தின் உன்னதம் பொறுப்பற்று அலையும் பொலிகாளைகளுக்குப் புரியாது...மொத்தத்தில் முத்திப்போன பைத்தியக்காரனாக தமிழகத்தைச் சுற்றிக்கொண்டிருக்கும் இந்த வில்லன் தமிழக மக்களிடம் உடனே மன்னிப்புக் கேட்க வேண்டும்...என்று நமது அம்மா கமலை மிகவும் தரங்கெட்ட வகையில் மறுபதிவு செய்யக்கூசும் பல வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.