Asianet News Tamil

1,52 லட்சம் கோடிகளை முதலாளிகளுக்கு வாரி இறைத்து விட்டு, மக்களிடம் கையேந்துவது வெட்கக்கேடு : சீமான் கொந்தளிப்பு

1.52 இலட்சம் கோடியை தனிப்பெரும் முதலாளிகள்வசம் வாரியிறைத்து காலிசெய்துவிட்டு இப்போது பேரிடர் காலத்தில் மக்களிடமே கையேந்தி நிற்பது மிக‌ மோசமான நிர்வாகச் சீர்கேடாகும். 

nam tamilar party seeman criticized central government economic policy
Author
Chennai, First Published Mar 31, 2020, 2:51 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தவறானப் பொருளாதார முடிவுகளால் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு தற்போது அவர்கள் தலை மீதே மொத்த சுமையையும் ஏற்ற முனைவதா என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் - சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் :-   நோய்த்தொற்று பரவலையொட்டி நாடு முழுமைக்கும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துவிட்டு,  அந்நாட்களில்  அடித்தட்டு உழைக்கும் மக்களின்  உணவுக்கும், வாழ்வாதாரத்திற்கும் எவ்வித உறுதிப்பாட்டையோ, திட்டத்தையோ அறிவிக்காத பிரதமர் மோடி,  தற்போது எவ்விதக் குற்றவுணர்வுமின்றி நாட்டு மக்களிடம் நிதிகேட்டு நிற்பது அறத்திற்குப் புறம்பான‌ அநீதிச்செயலாகும்.

 

ஏற்கனவே தவறானப் பொருளாதார முடிவுகளாலும், பிழையான பொருளாதாரக் கொள்கைகளாலும் நாட்டின் பொருளாதாரம் படுவீழ்ச்சியை சந்தித்து விலைவாசி உயர்வும், பணவீக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது.  இத்தோடு, எதிர்காலத்தை கணிக்கவே முடியாத கொரோனா எனும் நோய்த்தொற்று பரவலிலிருக்கும் தற்காலத்தில் மத்திய அரசு மக்களிடம் நிதிகேட்டு நிற்பது மாபெரும் பாதகச்செயலாகும். ஏற்கனவே, மக்களிடமிருந்து அபரிமிதமான வரியைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்குரிய அடிப்படைத் தேவைகளையே நிறைவேற்றித்தராது அதனைத் தனியார்மயமாக்கிய ஆளும் வர்க்கம் தற்போது மேலும் அவர்களை சுரண்ட எண்ணுவது மிகப்பெரும் முறைகேடாகும். 

 அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நகர்த்த முடியும் எனும் விளிம்பு நிலை பொருளாதாரச் சூழலில் இருக்கிற 
45 கோடிக்கும் மேற்பட்ட  அமைப்புசாரா தொழிலாளர்களை  கொண்டிருக்கிற இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தும்போது கையாள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தோ, முன்னறிவிப்புகள் குறித்தோ, அடித்தட்டு உழைக்கும் மக்களின் உணவு, வாழ்விட உறுதிப்பாடுகள் குறித்தோ எவ்வித முன்னேற்பாட்டையும் செய்யாது, அவர்களுக்கான பேரிடர் கால நிதியுதவிகள் குறித்து ஏதும் அறிவித்திடாது வெறுமனே ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ள பிரதமர் மோடி,  தற்போது நாட்டு மக்களிடம் நிதிகேட்டு பொறுப்பை அவர்கள் தலை மீது மொத்தமாய் சுமத்த முயல்வது மக்களுக்குச் செய்யப்படும் மாபெரும் துரோகமாகும்.  இப்பேரிடர் காலத்தையொட்டி, 80 கோடி மக்களுக்கு அரிசி, பருப்பு போன்றவற்றை தருவதாக வாக்குறுதி அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதனை செயல்படுத்த எவ்வித முன்முயற்சியையும் எடுக்காது அறிவித்ததோடு தனது கடமை முடிந்து விட்டதெனக் கடந்துவிட்டார். 

 இவ்வாறு 80 கோடி மக்களே அரசிடம் உதவியை எதிர்பார்த்து நிற்கையில் அவர்களிடமே போய் நிதிகேட்டு நிற்பது என்ன மாதிரியான நிர்வாகச் செயல்பாடு? என்பது புரியவில்லை. தனது ஆளுகைக்குக் கீழ் இருக்கும் டெல்லியில் பல்லாயிரக்கணக்கான மக்களை வீதியில் நடக்க வைத்ததோடு மட்டுமல்லாது சமூக விலகலையும் முறித்த மத்திய அரசு, வெறுமனே வெற்று அறிவிப்புகள் மூலமாகவே மக்களின் பசியைப் போக்கி அவர்களது துயரத்தைத் துடைத்துவிட முடியும் என நம்புவது வேடிக்கையாக உள்ளது. தனிப்பெரும் முதலாளிகளுக்கு கடன், வரிச்சலுகைகள் என 7.78 இலட்சம் கோடியை கடந்த 6 ஆண்டுகளில் ஒதுக்கியதோடு மட்டுமல்லாது, அனைத்துப் பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கையையும் மீறி இந்திய ரிசர்வ் வங்கியில் வைக்கப்பட்டிருந்த இருப்புத்தொகையான 1.76 கோடி நிதியையெடுத்து அவற்றில் 1.52 இலட்சம் கோடியை தனிப்பெரும் முதலாளிகள்வசம் வாரியிறைத்து காலிசெய்துவிட்டு இப்போது பேரிடர் காலத்தில் மக்களிடமே கையேந்தி நிற்பது மிக‌ மோசமான நிர்வாகச் சீர்கேடாகும். 

பேரிடர் காலத்திற்கென ஒதுக்காமல் 3,000 கோடிகளைக் கொண்டு சிலையெழுப்பி வெற்றுச்செலவு செய்து பெருமைப்பட்டு புளங்காகிதமடைந்த மத்திய அரசு, இப்போது மாநிலங்கள் தலையில் நிதிக்காகக் கைவைப்பது எந்த விதத்திலும் ஏற்புடைய செயலல்ல  ஆகவே, தனிப்பெரும் முதலாளிகளின் வாராக்கடன்களை வசூலித்தும், அவர்களுக்குரிய வரி உள்ளிட்ட அத்தனை சலுகைகளையும் பறித்தும் வருவாயை உருவாக்கி இப்பேரிடர் காலத்தை எதிர்கொள்ள வேண்டும் என மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

Follow Us:
Download App:
  • android
  • ios