நக்கீரன் கோபால் மீது பாய்ந்துள்ள தேசிய பாதுகாப்பு சட்டம், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் மீது ஏன் பாயவில்லை என்றும், பாஜகவுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் இன்று சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர், சிந்தாதரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரிக்கப்பட்டார். அப்போது 4 மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

இதன் பின்னர், சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு நக்கீரன் கோபால் அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உடல்நலம் குறித்த மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு நக்கீரன் கோபால் நீதிமன்றத்தில் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட அழைத்து செல்லப்படுகிறார். 

கஸ்தூரிபாய் மருத்துவமனையில் இருக்கும் நக்கீரன் கோபாலை சந்திக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அவருடன் துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்ட பலர் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். மருத்துவமனையில், நக்கீரன் கோபாலை சந்தித்த மு.க.ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களைச் பேசினார். 

நக்கீரன் கோபால் மீது பாய்ந்த சட்டம் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது ஏன் பாயவில்லை. அறநிலையத்துறை ஊழியர் குடும்பங்களை கொச்சைப்படுத்தி பேசியவர் ஹெச்.ராஜா. தந்தை பெரியார் சிலை உடைக்க வேண்டும் என்று பகீரங்கமாக கூறியவர் ஹெச்.ராஜா. ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை.

 

மேலும் உயர்நீதிமன்றம் குறித்து கடுமையாக விமர்சித்தவர் ஹெச்.ராஜா. பெண் பத்திரிகையாளர் குறித்து தரக்குறைவாக விமர்சித்த எஸ்.வி.சேகர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. பாஜகவுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி என தமிழக அரசு செயல்படுகிறது. பாரபட்ச நடவடிக்கைகள் தொடர்ந்தால் மிக விபரீதமான விளைவுகளை ஆட்சியாளர்கள் சந்திக்க நேரிடும். தமிழகத்தில் சர்வாதிகார முறையில் அரசு செயல்படுகிறது. நக்கீரன் கோபாலை விடுவிக்காவிடில் விபரீதமான முடிவை சந்திக்க நேரிடும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.