தி.மு.க.விலிருந்து வெளியேறி ம.தி.மு.க.வில் இணைந்து, அங்கிருந்து கோபித்துக் கொண்டு அ.தி.மு.க. சென்று, ஜெயலலிதா மரணத்துக்கு பின் தினகரனின் தளபதியாகி, அ.ம.மு.க. துவங்கப்பட்டதும் வெளியேறி, ‘அரசியல் போதும். நான் இனி இலக்கியம் வளர்க்கப்போகிறேன்!’ என்று சீன் போட்ட நாஞ்சில் சம்பத் இதோ யு டர்ன் அடித்து மீண்டும் தாய்க்கழகமான தி.மு.க.வில் ஐக்கியமாக முடிவெடுத்துவிட்டார். நாள் குறித்தாகிவிட்டது, இணைவது மட்டுமே பாக்கி. 

இலக்கியம் வளர்க்க போன மச்சான் திரும்பி வந்தது ஏன்? என்று அவரிடமே கேட்டதற்கு “திராவிடம் தழைத்தோங்கிய தமிழ் மண்ணில் வகுப்புவாத சக்திகள் காலூன்ற திட்டமிடுகின்றன. இந்த சூழலில் கொள்கை இருக்கும் ஒரே கட்சி தி.மு.க.தான், நீங்கள் இருக்க வேண்டிய இடமும் அதுதான்! என்று இனிய நண்பர்கள் என்னை  வர்புறுத்துகிறார்கள், தி.மு.க.விலிருந்து சிலரும் என்னை அழைக்கிறார்கள். அதனால்தான் என்வாழ்வு இனி இலக்கியத்தோடு... என்று சென்றவன் இதோ பாதிவழியில் நின்று யோசிக்கிறேன். கூடிய விரைவில் சொல்கிறேன். 

ஹும்! ஜெயலலிதா இருந்தபோது பட்டத்து யானையாய் இருந்த அ.தி.மு.க.வை பொதிகழுதையாக்கி விட்டார்கள் பன்னீரும், பழனிசாமியும். இவர்களின் ஆட்சி ஆபத்திலிருந்து விடுபடுவது எப்போது? என்று ஒவ்வொரு கணமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறான் தமிழன். 

இதற்கிடையில் ரஜினி மற்றும் கமல் இருவரின் கூத்து ஒரு பக்கம் நகைப்பை தருகிறது. ரஜினிக்கு பக்குவம் கிடையாது, ஒரு கட்சி துவங்கி அதை நடத்திட முடியாது. தெளிவில்லாத கமல் தன்னை நம்பி இருக்கிற ரசிகர்களை ஏமாற்றும் பஞ்சமபாதகத்தை செய்து கொண்டிருக்கிறார். 

ஆக இந்த சீர்கேடுகளை எல்லாம் தாண்டி இன்னமும், கொள்கை அடித்தளம் இம்மியளவும் ஆடாமல் திராவிடக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி நிற்கிறது தி.மு.க. கருணாநிதியின் காலத்துக்குப் பின்னும் அந்த கட்சி மீது மக்கள் நம்பிக்கை குறையாமல் இருக்கிறார்கள். 

ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்கிறேன், தமிழகத்தை பிடித்துள்ள விஷச்சூழலில் இருந்து தமிழர்கள் விடுபட வேண்டுமென்றால் அவர்களுக்கு தி.மு.க.வை விட்டால் வேறு நாதியில்லை. இதை மக்களும் முடிவெடுத்துவிட்டார்கள்.” என்று போட்டுப் பொளந்திருக்கிறார். 

சம்பத் இப்படி அறிவாலயம் பக்கம் சரிவது அரசல் புரசலாய் பரவியபடி இருக்க, இணைய தளத்திலோ ‘சரி அங்கே இன்னோவா, இங்கே என்ன எதிர்பார்க்கிறீங்க பாஸ்?’ என்று அக்குறும்பாய் கேட்டிருக்கிறார்கள். 
சர்தான்!