அ.தி.மு.க.வில் இப்போது ‘விலகல்’ காலம்! தினகரனை விட்டு விலகிய நாஞ்சில் சம்பத், எடப்பாடி மற்றும் பன்னீரால் விலக்கி வைக்கப்பட்ட கே.சி.பழனிசாமி என்று ஒவ்வொரு அணியிலிருந்தும் ஆளுமைகள் விலகுவது அல்லது விலக்கப்படுவது அவ்வியக்கத்தில் தொடர்கிறது. 

இது அம்மாவுக்கு பிந்தைய அ.தி.மு.க.வில் வெகு வாடிக்கைதான் என்றாலும் கூட இப்போது விலகி இருக்கும் இருவரும் தாங்கள் சார்ந்திருந்த அணிகளுக்கு மிகப்பெரிய பக்கபலமாய், பிரச்சார பீரங்கியாய், சரிகையில் முட்டுக் கொடுத்து தூக்கிய தூண்களாய் இருந்தவர்கள் இருவரின் இழப்பும் அந்தந்த அணிகளுக்கு சறுக்கலே என்பதில் சந்தேகமில்லை. 

நாஞ்சில் சம்பத்:
பன்னீர்செல்வத்தால் அ.தி.மு.க.வினுள் வாழ்க்கை பெற்ற இவர் அதே பன்னீர்செல்வத்தை ‘பார்ப்பதற்கே அருவெறுப்பான ஒரு மனிதன் உண்டென்றால் அது பன்னீர்தான்.’ என்று ஒருமையில் ஓங்காரமாய் திட்டிய மனிதர். ஆயிரமிருந்தாலும் பன்னீர்செல்வம் ஒரு முன்னாள் முதல்வர், இந்நாள் துணை முதல்வர் என்கிற அடிப்படை புரோட்டோகாலை பற்றி கூட கவலைப்படாமல் புரோட்டாவை பொரித்தெடுப்பது போல் தன் வாய் எண்ணெய் சட்டியில் பன்னீரை கொதிக்க கொதிக்க வறுத்தெடுத்தார். பன்னீர் அளவுக்கு எடப்பாடியை அதிகம் சீண்டாவிட்டாலும் கூட, ’தினகரன்  நடத்துவது தொண்டர் கட்சி ஆனால் எடப்பாடி நடத்துவது டெண்டர் ஆட்சி’ என்று வகுந்தெடுத்தவர். 

தினகரனை ஆளுமை மிகுந்த அரசியல் தலைவராகவும், பழனிசாமி-பன்னீர் இருவரையும் சுயநல தலைவர்களாகவும் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் தன் லாவக பேச்சால் உருவகப்படுத்தியவர். வழக்கு கிழக்குகளை பற்றி கவலைப்படாமல் ஆளும் அரசை அர்சித்துக் கொட்டியவர். நாஞ்சிலார் பேசுகிறார் என்பதற்காகவே தினகரன் அணியின் பொதுக்கூட்டத்துக்கு கூட்டம் கூடும். 
அப்பேர்ப்பட்ட மனிதர், தினகரன் தனிக்கட்சி துவங்கிய பின், ‘அண்ணாவும் இல்லை! திராவிடமும் இல்லை! இந்த கட்சியில் நான் எப்படி இருக்க முடியும்? நான் விலகுகிறேன்.’ என்று சொல்லி நகர்ந்திருக்கிறார். தினகரனின் குடையின் கீழ் நின்று கொண்டுதான் ஆட்சியாளர்களை புரட்டியெடுத்தார், ஆனால் இன்று வெளியே வந்துவிட்ட நிலையில் பன்னீர்செல்வம் ‘துணை முதல்வர்’ எனும் அதிகாரத்தை பயன்படுத்தி தன்னை ஒடுக்க நினைக்கலாம்! என்கிற அச்ச உணர்வு எதுவும் தனக்கில்லாமல் அவர் நிமிர்ந்து நிற்பது ஆச்சரியமே. 

அதே நேரத்தில் திட்டமிட்டே, வேறொரு இலக்குடன் நாஞ்சிலார் இந்த விலகலை நிகழ்த்தியிருக்கிறார்! அது விரைவில் வெளிவரும் என்கிறார்கள் தினகரனின் ஆதரவாளர்கள்.

கே.சி.பழனிசாமி:

ஜெயலலிதாவுக்கு பிந்தைய அ.தி.மு.க.வில்  கூச்சல்களும், குழப்பங்களும் வெகு உச்சத்தில் இருந்தன. அப்போது கட்சியை காக்க ஆளாளுக்கு ஒரு நிலைப்பாடு எடுத்தபோது சட்டரீதியாகவும், ஆவண ரீதியாகவும் கட்சியை ஸ்திரப்படுத்த முயன்றவர்களில் முக்கியமானவர் இந்த கே.சி.பி. மாஜி எம்.எல்.ஏ., மாஜி எம்.பி. எனும் பட்டங்களுக்கு சொந்தக்காரர். 

பன்னீர் ‘தர்மயுத்தம்’ எனும் பெயரில் போராட்டம் நடத்தியபோது அவரருகில்தான் நின்றார். ஆனால் அதேவேளையில், அணிகள் இணைப்புக்கு முக்கிய பாலமாக இருந்தவர் இவரே. 
இரு அணிகளும் இணைந்த பின் உருவாக்கப்பட்ட ‘கழக ஒருங்கிணைப்பாளர்! இணை ஒருங்கிணைப்பாளர்!’ என பன்னீர் மற்றும் பழனிசாமிக்காக அவர்களே உருவாக்கிக் கொண்ட பதவிகளை தேர்தல் கமிஷன் இன்று வரை அங்கீகரிக்கவில்லை, ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை ஆவண ரீதியில் வெளிப்படுத்தி கட்சியின் தலைமையை அலர்ட் செய்தவர். அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளராக இருந்து கட்சியின் வார்த்தைகளை கழனியெங்கும் கொண்டு சென்றவர். 

காவிரி மேலாண்மை அமைக்கும் விவகாரத்தில், தமிழர் நலனுக்காக பி.ஜே.பி.க்கு எதிராக இவர் எடுத்த நிலைப்பாடு இவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்தே விலக்க வைத்திருக்கிறது. 
‘என்னை நீக்கியதில் என்ன அடிப்படை தார்மீகம் இருக்கிறது? நான் கட்சியின் கோட்பாடுக்கு எதிராக செயல்பட்டிருக்கிறேன் என்கிறார்கள், பி.ஜே.பி.யை விமர்சிக்க கூடாது! என்பது அ.தி.மு.க.வின் சட்டமா, அடிப்படை விதியா, கோட்பாடா?’ என்கிறார். 
நியாயமான கேள்விதான்!

ஆக ஒரே கட்சியின் இரு வேறு அணிகளில் இருந்து இரு முக்கிய ஆளுமைகள் நகர்ந்திருப்பதும், நகர்த்தப்பட்டிருப்பதும் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் இரண்டாவது கருத்தில்லை.