Najeem zaidi pressmeet
மின்சாரம், குடிநீர், தொலைபேசி உள்ளிட்ட கட்டணங்களைச் செலுத்தாத கட்சிகள் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தத் தடை விதிப்பது குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
மக்களவை, மற்றும் சட்டப் பேரவைத் தேர்தலில் வேட்காளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது மின்சாரம், குடிநீர் போன்ற அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை முழுமையாகச் செலுத்தியதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கும் இதேபோன்ற விதிமுறையைக் கொண்டுவர தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
இது குறித்து அரசியல் கட்சிகளிடம் கருத்துகளைக் கேட்டு தேர்தல் ஆணையம் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளது.
வேட்பாளர்கள் மட்டுமின்றி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளும் மின்சாரம், குடிநீர், தொலைபேசி உள்ளிட்ட கட்டணங்களைப் பாக்கி வைக்கவில்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடுவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டுமென்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, உயர் நீதிமன்றத்தின் உத்தரவைப் பரிசீலித்து அது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, எவ்வித கட்டண பாக்கியும் இல்லை என்ற சான்றிதழை அளிக்க வேண்டும் என்ற விதிமுறையை ஏற்படுத்துவது குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென்று மத்திய சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளதாகவும் நஜீம் ஜைதி தெரிவித்தார்..
