நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடு உள்ளது. தனித்து போட்டியிடுவது என்பது கடினமான முடிவு அல்ல. தொண்டர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளோம்.

தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது தொடர்பாக பாஜக தலைமையிலான கமலாயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், துணை தலைவர் வி.பி.துரைசாமி, பொது செயலாளர் கரு.நாகராஜன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை;- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடு உள்ளது. தனித்து போட்டியிடுவது என்பது கடினமான முடிவு அல்ல. தொண்டர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளோம். 

உள்ளாட்சி தேர்தலில் 10 சதவீத இடங்களுக்குமேல் போட்டியிட விரும்புவதால் பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதிமுக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நான் நேசிக்கக் கூடிய தலைவர்கள். கடினமான சூழலிலும் அதிமுகவை ஓபிஎஸ், இபிஎஸ் வழிநடத்தினார்கள். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துபோட்டி என்றாலும் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது தொடர்ந்து நீடிக்கும். அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு நயினார் நாகேந்திரன் பேச்சு காரணமல்ல. அதிமுக உடனான நல்லுறவு வரும் காலங்களிலும் தொடரும். பாஜகவுக்கு என்ன வலு இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். தமிழக பாஜகவின் முடிவை தேசிய தலைமையும் ஏற்றுக் கொண்டுள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், இன்று அமாவாசை என்பதால் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் பாஜகவின் நயினார் நாகேந்திரன், சட்டப்பேரவையில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை என்றும் அதிமுக மக்கள் பிரச்சனையைச் சட்டமன்றத்தில் எப்போதுமே பேசுவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். இது அதிமுக - பாஜக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.