நாகர்கோவிலில் மேயர் பதவியைக் கைப்பற்ற 27 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. தற்போது பாஜகவுக்கு 11, அதிமுகவுக்கு 7 என 18 கவுன்சிலர்கள் ஆதரவு இருக்கிறது. இரண்டு சுயேட்சை கவுன்சிலர்களின் ஆதரவைப் பெற்றுவிட்டதாகவும் பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது.
நாகர்கோவில் மாநகராட்சியில் திமுக கூட்டணி மெஜாரிட்டியுடன் வென்றபோதும், மேயர் பதவியைக் கைப்பற்ற பாஜக தீவிரமாக களமிறங்கியிருக்கிறது.
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி 21 மாநகராட்சிகளையும் வென்றது. மேயர் பதவிகளை பெறும் வகையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், திமுகவுடன் பேசி வருகின்றன. இந்நிலையில் நாகர்கோவிலில் மேயர் பதவிக்கான கோதாவில் பாஜக களம் இறங்கியிருக்கிறது என்ற தகவல்கள் அலையடிகின்றன. மாநகராட்சித் தேர்தலில் கோவையையும் நாகர்கோவிலையும் பாஜக பெரிதும் எதிர்பார்த்தது. கோவையில் பாஜகவுக்கு ஓரிடமும் கிடைக்கவில்லை. ஆனால், நாகர்கோவிலில் 11 வார்டுகளில் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 52 வார்டுகளில் திமுக கூட்டணி 32 வார்டுகளில் வென்று மாநகராட்சியைக் கைப்பற்றியது. திமுக 24, காங்கிரஸ் 7, மதிமுக 1 என திமுக கூட்டணியில் கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

அதிமுக 7 இடங்களில் வென்து. மற்ற மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கு திமுக கூட்டணிக்கு போட்டியே இல்லை என்ற நிலையில், நாகர்கோவிலில் மேயர் பதவிக்கு பாஜக களமிறங்குகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், “எந்த ஒரு தேர்தலிலும் போட்டியின்றி ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவது நல்லதல்ல. போட்டியிடும் பல கட்சிகளில் எது நல்ல கட்சி, நல்ல வேட்பாளர் யார் என்பதை பார்த்து மக்கள் தேர்வு செய்வார்கள். அதுபோலத்தான் மேயர் தேர்தலிலும் நடக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்று தெரிவித்திருந்தார்.

பாஜக சார்பில் மீனாதேவ் என்பவர் தேர்தலுக்கு முன்பே மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் இரண்டு முறை நாகர்கோவில் நகராட்சிமன்ற தலைவராக இருந்தவர். இவர் மீது கிளீன் இமேஜ் நாகர்கோவிலில் உண்டு. எனவே, இவரை வெற்றி பெற வைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. திமுக, காங்கிரஸ் கட்சியில் உள்ள கவுன்சிலர்களை வளைக்கும் வகையில், ‘ஒரு சிறந்த நிர்வாகியை மேயர் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறோம். அனைத்து கவுன்சிலர்களையும் மனசாட்சிபடி வாக்களியுங்கள். கட்சிப்படி வாக்களிக்க வேண்டாம்’ என்று பாஜகவினர் மனதைக் கரைத்து வருகிறார்கள். நாகர்கோவிலில் மேயர் பதவியைக் கைப்பற்ற 27 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. தற்போது பாஜகவுக்கு 11, அதிமுகவுக்கு 7 என 18 கவுன்சிலர்கள் ஆதரவு இருக்கிறது. இரண்டு சுயேட்சை கவுன்சிலர்களின் ஆதரவைப் பெற்றுவிட்டதாகவும் பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே நாட்டின் தென்கோடி முனையில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியைக் கைப்பற்ற டெல்லியில் உள்ள பாஜக தலைமையும் ஆர்வம் காட்டி வருவதாக பாஜகவினர் சொல்கிறார்கள். பாஜகவுக்கு இன்னும் 7 கவுன்சிலர்கள் தேவை என்று அக்கட்சி சொல்லும் நிலையில், திமுகவில் மாவட்டச் செயலாளர் சுரேஷ் ராஜன், அமைச்சர் மனோ தங்கராஜ் இடையே மேயர் தேர்வில் பூசல் ஏற்பட்டால், அதைப் பயன்படுத்தி திமுக கவுன்சிலர்களை தங்கள் பக்கம் வாக்களிக்க செய்யும் ஏற்பாடுகளையும் பாஜக செய்து வருவதாக தகவல்கள் கொட்டுகின்றன. மேலும் காங்கிரஸ் கட்சியில் 7 கவுன்சிலர்கள் உள்ளனர். அவர்களையும் அணுகி, மேயர் பதவியைப் பெற பாஜகவுக்கு உதவினால், துணை மேயர், மண்டலத் தலைவர் பதவிகளை பெற்று தருவதாகவும் பாஜக பேசி வருவதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

இதன்மூலம் வட இந்தியாவில் ஆட்சிகளை கைப்பற்றிய பாணியில் நாகர்கோவில் மாநகராட்சியை பாஜக வெல்லக்கூடும் என்றும் அக்கட்சியினர் மத்தியில் பலமாக பேச்சுகள் எழுந்துள்ளன. தேர்தல் ரிசல்ட் வெளியான அன்றும் அதன் பிறகும் தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் திமுகவில் ஐக்கியமாகி வருவதைக் காண முடிகிறது. இதே உத்தியை நாகர்கோவிலில் பாஜக கையில் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. நாகர்கோவில் மாநகராட்சித் தேர்தலில் அதிர்ச்சிகள் நடந்தேறுமா என்பது மார்ச் 4 அன்று தெரிந்துவிடும்.
