தேவர், வன்னியர்களை தொடர்ந்து நாடார்களின் வாக்கு வங்கிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறி வைத்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் வன்னியர்கள் போற்றும் ராமசாமி படையாச்சியார் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கை அண்மையில் தான் நிறைவேற்றப்பட்டது. இதனால் வன்னியர் சங்கங்களின் நிர்வாகிகள் அண்மையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.இதே போல் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு பள்ளிப் பாடப்புத்தகத்தில் பாடத்திட்டமாக சேர்க்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த அறிவிப்பும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடனான ஆலோசனைக்கு பிறகே செங்கோட்டையனால் அறிவிக்கப்பட்டது. முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டம் இடம்பெறும் என்கிற தமிழக அரசின் அறிவிப்பு தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது.

 இந்த இரண்டு அறிவிப்புகளுக்கு பின்னாலும் மிகப்பெரிய வாக்கு வங்கி அரசியல் உள்ளது. தென்மாவட்டங்களில் மெஜாரிட்டியாக உள்ள தேவர் சமுதாயத்தையும், வட மாவட்டங்களில் மெஜாரிட்டியாக உள்ள வன்னியர் சமுதாயத்தையும் மகிழ்ச்சிப்படுத்துவதன் மூலம் அவர்களின் ஆதரவை வரும் தேர்தலில் பெற முடியும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் கணக்கு. மேலும் தமிழக அரசில் தற்போது கவுண்டர்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக எழுந்துள்ள விமர்சனங்களை சமாளிக்கும் வகையிலும் மற்ற ஜாதியின் தலைவர்களை போற்றும் வகையிலான அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

 இந்த நிலையில், தேவர், வன்னியர் சமுதாயத்தை தொடர்ந்து நாடார் சமுதாயத்தின் பக்கம் எடப்பாடி பழனிசாமியின் பார்வை திரும்பியுள்ளது. விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி தொகுதிகளில் தேர்தல் வெற்றியை தீர்மானிப்பவர்களாக நாடார்கள் உள்ளனர். இந்த  தொகுதிகள் தவிர மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகளிலும் அதிக எண்ணிக்கையில் நாடார்கள் உள்ளனர். எனவே வரும் தேர்தலில் நாடார்களின் வாக்கு வங்கியை குறி வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.  ஆண்டு தோறும் விருதுநகரில் நாடார் மகாஜன சங்கம் காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வித் திருவிழாவாக கொண்டாடி வருகிறது. நாடார் சங்கங்களிலேயே மிகவும் பழமையானது மற்றும் நூற்றாண்டு விழா கொண்டாடிய அமைப்பு நாடார் மகாஜனசங்கம். இந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜுக்கு தமிழகம் முழுவதும் உள்ள நாடார்கள் மத்தியில் நல்ல பெயர் உண்டு. இவர் மூலமாக இந்த கல்வித் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
 
 இதற்கு முன்னர் கருணாநிதி, ஜெயலலிதா ஏன் துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலினை கூட கல்வித் திருவிழாவிற்கு கரிக்கோல்ராஜ் அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் ஜாதி முத்திரை பதிந்துவிடும் என்று நாடார் மகாஜனசங்கத்தின் கல்வித்திருவிழாவில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தனர். ஆனால் அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்களை தவறாமல் அனுப்பி வைக்கும் வழக்கத்தை கருணாநிதியும், ஜெயலலிதாவும் வைத்திருந்தனர். ஆனால் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ விருதுநகருக்கு நேரில் சென்று காமராஜரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க உள்ளார். ஜாதிச்சங்கம் ஒன்று ஏற்பாடு செய்துள்ள விழாவாக இருந்தாலும், அந்த விழாவிற்கு தமிழகம் முழுவதும் உள்ள நாடார் சங்கங்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்பதால் சில வாக்குறுதிகளை அவர்களுக்கு கொடுத்து தேர்தலில் ஆதரவை பெற எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.