திமுக ஆட்சி அமைத்ததும் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் மரணத்தின் உள்ள சதிகள் விசாரிக்கப்படும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், அவரது கருத்துக்கு " சாத்தான் வேதம் ஓதுவதும், ஸ்டாலின் நீதிபதி போதிப்பதும்'' என்ற தலைப்பில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் குத்தீட்டி பகுதியில் திமுகவை  விமர்சித்து செய்தி தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.  அதில் கூறியிருப்பதாவது:  அம்மாவின் மரணத்தில் உள்ள சதிகள் விசாரிக்கப்படும் என்று ஸ்டாலின் சொல்லுவதற்கு முன்பாக, அண்ணாநகர் ரமேஷ் மற்றும் அவரது குடும்பம் மொத்தமாக கொத்தாக செத்து போனார்களே அந்த மர்ம மரணத்தின் பின்னணியில் தனது பங்கு என்ன என்பது குறித்து விசாரிப்பேன் என்று அறிவிப்பாரா.? 

அதுபோலவே பெரம்பலூர் சாதிக்  மர்ம சாவுக்கு ஸ்டாலின் தான் காரணம் என்று திமுகவின் கூட்டணி கட்சித் தலைவர் வைகோ ஊடகங்களை கூட்டி வைத்து முறை யிட்டதோடு அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அறிவித்தாரே, இதன் பின்னணி குறித்து விசாரிப்போம் என்பாரா ஸ்டாலின்.?  அதுபோலவே அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயகுமார் படுகொலைசெய்யப்பட்ட வழக்கும், அவரது பெற்றோர்களை பிடித்து வந்து தங்கள் பிள்ளையே இல்லை என்று சொல்ல வைத்த பின்னணி குறித்தும், தா.கிருட்டிணன் அவர் போட்ட சாலையிலேயே தாறுமாறாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கு குறித்தும், மதுரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் படுகொலை, லீலாவதி மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டனை காலத்திற்கு முன்பே திமுக ஆட்சிக்காலத்தில் சிறையில் இருந்து திறந்து விட்டதன் பின்னணி.? விபரங்கள் இவற்றையும் விசாரிப்போம் என்று ஸ்டாலின் பிரசாரம் செய்வாரா.? 

இவை யாவுக்கும் மேலாக கருணாநிதி பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல அறிவாலயத்திற்கு சென்ற கே.கே நகர் பகுதி மகளிரணி பிரமுகர் பால் மலர் படப்பை மணிமங்கலம் அருகே முட்டைக்குள் கட்டப்பட்ட நிலையில் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தாரே அந்தப் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் அன்பகத்தாலும், அறிவாலயத்தாலும் அடைகாக்கப்படுகிறார்கள் என்று செத்துப்போன பால்மலரின் கணவர் முருகேசன் வார இதழ் ஒன்றில் கண்ணீர் மல்க பேட்டி கொடுத்தாரே அந்த விவரங்களை எல்லாம் விசாரிப்பேன் என்று நீதிமான் ஸ்டாலின் நெஞ்சு நிமிர்த்தி சொல்வாரா. 

இப்படி திமுக ஆட்சிக்காலத்தில் நடந்த மர்மச்சாவு களையும் கோல்மால்புரத்தை மையப்படுத்தி பலிபீடம் ஏற்றப்பட்ட பரிதாப பேர்வழிகளின் பின்னணிகளையும் விசாரிக்க வேண்டும் என்று சொன்னால் இதற்காக ஒரு தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும். அதனால் சாத்தான் வேதம் ஓதுவதும், ஸ்டாலின் நீதி போதிப்பதும்  ஒன்றுதானே, என குத்தீட்டி திமுகவை சரமாரியாக குத்தி கிழித்துள்ளது.