பாஜகவில் இணைவதாக வெளிவரும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே. புதிய கட்சி தொடங்குவது குறித்து போகப்போகத்தான் தெரியும் என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மு.க.அழகிரி கலைஞர் மரணத்திற்கு பிறகு மீண்டும் அரசியல் களம்புக திட்டமிட்டார். ஆனால் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு திமுக தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. அழகிரியால் திமுகவில் பதவி பெற்றவர்கள், உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் கூட அவரை கண்டுகொள்ளவில்லை. இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட அரசியல் துறவரம் பெற்ற நபர் போல் அழகிரி ஒதுங்கியிருந்தார். அவ்வப்போது தனது ஆதரவாளர்கள் இல்ல நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று அரசியல் பேசி வந்தார். இதற்கிடையே பாஜகவில் இணைய உள்ளதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகி கொண்டிருந்தனர். 

மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.அழகிரி;- புதிய கட்சி தொடங்குவது பற்றி போகப் போக தான் தெரியும். எதுவாக இருந்தாலும் ஆதரவாளர்களுடன் ஆலோசித்து விரைவில் எனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என்றார். 

மேலும், பாஜகவில் இணைவதாகக் கூறப்படு் தகவல்கள் அனைத்தும் வதந்தியே என கூறினார். திமுகவில் துரை தயாநிதிக்கு பதவி வழங்கப்படுகிறதா என்று கேட்டதற்கு, அழைத்துப் பேசட்டும் என்று அவர் பதிலளித்தார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்