நான் மறைந்துபோனதற்கு பிறகும் கூட எனது குடும்பம் திமுகவுக்கு நன்றியோடு இருக்கும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உருக்கமாக பேசியுள்ளார். 

திமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் காலை தொடங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். தலைமை அலுவலகத்தில் 70 பேர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், பொது செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இதன் பின்னர் பொதுசெயலரின் அதிகாரத்தை மீண்டும் பொது செயலாளரிடமே ஒப்படைக்கும் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. 

இதனையடுத்து, திமுக பொதுக்குழுவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசுகையில்;- என்னிடம் பாசம்காட்டியவர் எம்ஜிஆர். என்னை வளர்த்தவர் கருணாநிதி. எம்ஜிஆர் என் சட்டையை பிடித்து இழுத்து அறைக்கு அழைத்துச் சென்றார். நான் இருக்கும் இடத்தில் நீ இருக்க வேண்டும் என்று எம்ஜிஆர் கூறினார். ஆனால், நான் என் தலைவர் கலைஞர். என் கட்சி திமுக என எம்ஜிஆரிடம் கூறினேன். அப்போது என்னை கட்டிப்பிடித்துக் கொண்டு பாராட்டியவர் எம்ஜிஆர் என துரைமுருகன் பேசினார்.

மேலும் பேசிய அவர் எனது மறைவிற்குப் பின்னரும் திமுகவிற்கு தாசனாக எனது குடும்பம் இருக்கும். என் கட்சி, என் தலைவன், என் கொள்கை என வாழ்பவன் நான். இந்தியை திணிப்பவர்களை நாம் ஆக்ரோஷமாக எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் இப்போது நம்மை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை இல்லாத வகையில் புதிய பண்பாட்டு படையெடுப்பு நம் மீது நடக்கிறது. மிகப்பெரிய ஆபத்து நம்மை சூழ்ந்திருக்கிறது. இளைய சமுதாயம் வீறுகொண்டு எழ வேண்டும். இந்தி, சமஸ்கிருத திணிப்பை எதிர்க்கும் மகத்தான சக்தியை நாம் பெற வேண்டும் என துரைமுருகன் பேசியுள்ளார்.