காவிரிப் பிரச்னைக்காக முத்துக்கருப்பன் தன் எம்.பி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். டெல்லியில் தமிழர்களுக்காக எதிர்ப்புக் குரல் கொடுக்க ஒருவராவது இருக்கிறாரே என்று தமிழகமே முத்துக்கருப்பனை கொண்டாடியது. “என் பிள்ளைகளுக்கு குடிக்க தண்ணீர் இல்லையெனும்போது டெல்லியில் எனக்கு கார், பங்களா, பதவி எதற்கு?” என அந்த பேச்சுக்கு அதிமுகவை எதிர்க்கு திமுக கூட  ஆஹா இவர் தான்யா மானஸ்தன்.

மனுஷன்யா... என கொண்டாடியது. அதுமட்டுமல்ல, காவிரிப் பிரச்னைக்காக, தான் வகித்துவந்த மத்திய அமைச்சர் பதவியையே தூக்கி எறிந்த வாழப்பாடி ராமமூர்த்தியுடன் ஒப்பிட்டது.  சில வரலாறுகளை காலம் தனது பொன்னெழுத்துகளில் பொறித்துக்கொள்ளும் வாழப்பாடி ராமமூர்த்திக்கு பிறகு காவிரி தாய் மகிழும் ஓர் நிகழ்வு.

என புகழ்ந்து கொண்டிருக்கும் அதே வேலையில் வெங்கையா நாயுடுவிடம் ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார். ஆனால் கடைசியில் இது நாடகமாகி விட்டது. அதாவது இவர் கொடுப்பது போல கொடுத்தார். அவரும் நிராகரிப்பது போல நிராகரித்தார். இப்போது மறுபடியும் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று அந்தர் பல்டி அடித்தார் முத்துக்கருப்பன்.

சரி! அது கிடக்கட்டும்... வாழப்பாடியார் ராஜினாமா செய்த வரலாறு என்ன?  முத்துக் கருப்பனை வாழப்பாடி ராமமூர்த்தியோடு ஒப்பிடுவதற்காண காரனம என்ன? என்று புருவம் சுருக்குபவர்களுக்காக இதோ வரலாறு ... ராஜிவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு பத்தாவது மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி 232 தொகுதிகளை மட்டும் கைப்பற்றியது.

மைனாரிட்டி அரசின் பிரதமராக புன்னகை மன்னன் (!?!) நரசிம்மராவ் பிரதமரானார். அப்போது கர்நாடக மாநிலத்திலிருந்து மட்டும் 23 எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கால் பதித்தனர்.ஆட்சியும், காலமும் உருள ஆரம்பித்தது. வழக்கம்போல் காவிரி நீர் பங்கீடு விவகாரம் வேலையை காட்ட  துவங்கியது.

என்னவோ தெரியவில்லை அந்த முறை இந்த பிரச்னை பூதாகரமாக வெடித்தது. தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக தனிப்பொறுப்புடன் இருந்தார். தமிழகத்தில் ஜெயலலிதா அரசு ஆண்டு கொண்டிருந்தது.

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு உரிய நீதியை பெற்றுத்தர மத்திய அரசை கோரி சில கட்சிகளும், தொடர் துரோகம் செய்யும் கர்நாடகத்தை கண்டிக்காதது ஏன்? என்று கண்டித்து சில கட்சிகளும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தன.

மத்தியில் ஆள்வது காங்கிரஸ் அரசு. வாழப்பாடியாரோ தமிழக காங் தலைவர் அதிலும் மத்திய அமைச்சர். அவருக்கு இந்த விவகாரம்  ஏக நெருக்கடி கொடுத்தது. மன ரீதியாக அழுத்தத்தை உணர்ந்தார். சபிக்கப்பட்ட தன் மண் சார்பாக தனது உண்மையான வருத்தத்தை பதிவு செய்ய விரும்பினார். சட்டென்று எடுத்தார் ராஜினாமா முடிவை.

தனது நெருங்கிய நண்பர்கள், அரசியல் ரீதியில் தனித்தனி இயக்கங்கள் என்றாலும் ஆரோக்கியமான நட்பை பாராட்டும் ஜெயலலிதாவிடம் கூட இது பற்றி கலந்து கொள்ளவில்லை அவர். தென் தமிழகம் இந்த முடிவால் அதிர்ந்தது.நரசிம்ம ராவ் எவ்வளவோ பேசிப்பார்த்தார். ம்ஹூம்!எதுவும் பலிக்கவில்லை. ராஜினாமா செய்தது செய்ததுதான் என்றார்.

இத்தனைக்கும் வாழப்பாடியார் வகித்த தொழிலாளர் நலத்துறை அவர் விரும்பி கேட்டு நரசிம்மராவிடம் வாங்கியது.
மத்தியமைச்சர் பதவியை துறந்து சென்னை திரும்பிய வாழப்பாடியாரை வெளியில் சொல்லாவிட்டாலும் மனதில் மானசீகமாக கொண்டாடினர் மாற்றுக்கட்சி தலைவர்களும்.

சரி, வாழப்பாடியார் ஏன் ராஜினாமா செய்தார்? உள்ளேயிருந்து போராடியிருக்கலாமே, அதுதானே புத்திசாலித்தனம்! என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் யதார்த்தம் வேறு. நரசிம்மராவின் ஆட்சியோ மைனாரிட்டியாக இருக்கிறது.

எனவே ஒவ்வொரு எம்.பி.யும் ஆட்சியின் ஸ்திரதன்மைக்கு முக்கியம். அதிலும் முள்ளங்கி பத்தை போல் 23 எம்.பி.க்களை கர்நாடகா கொடுத்திருக்கிறது. என்னதான் தமிழகம் பக்கம் நியாயமிருந்தாலும் அதற்காக கர்நாடகாவை பகைத்துக் கொண்டால் இந்த 23 எம்.பி.க்களும் ராஜினாமா செய்யகூட தயங்கமாட்டார்கள் அல்லது ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கவும் யோசிக்க மாட்டார்கள்.

இப்படிப்பட்ட காரணங்களால் ஆட்சியே கவிழலாம். எனவே கர்நாடகத்துக்கு எதிராக காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் அரசு அதிகாரம் செலுத்த வாய்ப்பே இல்லை என்பதை புரிந்து கொண்டே வாழப்பாடியார் இந்த வரலாற்று முடிவை எடுத்தார்.

இதுதான் வாழப்பாடியார் தன் மண்ணுக்கு காட்டிய அட்டகாச ஆதரவு!