சட்டப்பேரவையை உடனே கூட்டி பெரும்பான்மையை முதல்வர் பழனிசாமி நிரூபிக்க வேண்டும் என்றும், உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் எடப்பாடி அணியில் இருந்து 20 பேர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் பெரும்பான்மையை இழந்து தமிழக அரசு செயல்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்த வண்ணம் உள்ளது. 

மேலும், ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடிக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். 

இது போதாத குறைக்கு அதிமுக தரப்பிலிருந்து எடப்பாடி தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்திருப்பது தான் தற்போது சுவாரசியமாக பேசப்பட்டு வருகிறது. 

இதனிடையே உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் ஆளுங்கட்சி இழுக்கடித்து கொண்டே வருகிறது. இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் பறிக்கப்பட்டதால் அதிமுக தேர்தலை கண்டு அஞ்சுவதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 

இதைதொடர்ந்து நவம்பர் 17 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என அதிரடியாக  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் வேட்பாளர்களின் குற்றப்பிண்ணனி குறித்து இணையதளத்தில் வெளியிடவும் உள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணையை 2 வெளியிடவும் உத்தரவிட்டுள்ளது.

இதில் இருந்து நேரம் கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், சட்டப்பேரவையை உடனே கூட்டி பெரும்பான்மையை முதல்வர் பழனிசாமி நிரூபிக்க வேண்டும் என்றும், உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்றும் தெரிவித்தார்.