திருத்துறைப்பூண்டியில் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். “கடந்த மார்ச்சிலிருந்து ஊரடங்கு தொடர்வதால் விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்கள், வணிகர்கள், சிறு, குறு தொழில் புரிவோர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் அரசிடம் வலியுறுத்தியும் அதற்கு அரசு செவி சாய்க்கவில்லை. தொழில் நிறுவனங்களில் 75 சதவீதம் தொழிலாளர்கள் பணிபுரியலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் பொதுப் போக்குவரத்து இல்லாமல் தொழிலாளர்கள் எப்படி வேலைக்கு வர முடியும்? இதற்கெல்லாம் அரசு தீர்வு காணவேண்டும்.
கொரோனாவை பயன்படுத்தி மத்திய அரசு பல அவசர சட்டங்களை வேக வேகமாக நிறைவேற்றிவருகிறது. விவசாயிகளுக்கு எதிராக மின்சார திருத்தச் சட்டம், சுற்றுச்சூழலுக்கு எதிரான சட்டங்களையும் மத்திய அரசு கொண்டுவருகிறது. பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் மத்திய அரசு செயல்படுகிறது. இதனால் விவசாயிகளின் உரிமைகளும் மாநில உரிமையும் பறிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு எதிராக அரசுக்கு வந்த 2 லட்சம் மனுக்களை மத்திய அரசு பரிசீலனை செய்யவில்லை. மாநில அரசுகளின் கருத்துகளையும் கேட்காமல் அவரசமாக கூடி முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
இது புதிய கல்விக் கொள்கையல்ல. பழைய கல்வி கொள்கை. ராஜாஜி இருந்தபோது குலக்கல்வியை கொண்டுவந்தார். இதனால், நாடே கொந்தளித்தது. அதன் பிறகு ராஜாஜி தனது பதவியை ராஜினாமா செய்தார். குலக்கல்வி என்பதற்கு பதிலாக தொழிற்கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை நுழைக்கவும் ஹிந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை திணிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இதில் மாநில அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.” என்று முத்தரசன் தெரிவித்தார்.