உ.பி மாநிலம், அயோத்தியில் நடைபெறவுள்ள ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் முஸ்லிம் ராம பக்தர்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.

அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. முஸ்லிம்களிலும் பலர் ராமரின் பக்தர்களாக உள்ளனர். இவர்கள் அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர். அயோத்தி தவிர பல்வேறு மாநிலங்களில் இருந்தும் முஸ்லிம்களும் கலந்துகொள்ள விரும்புகின்றனர்.

இவர்களில் ஒருவரும், அயோத்தி மாவட்டத்தின் பைஸாபாத்வாசியுமான ஜம்ஷெட்கான் கூறும்போது, "இந்துவாக இருந்த நாங்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறி முஸ்லிம்கள் ஆனோம். இதுபோல, இடையில் மதம் மாறுவதால் நம் மூதாதையர்களும் முஸ்லிம் என்றாகி விடாது. எனவே, அவர்களில் ஒருவரான ராமருக்கான கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் இந்து சகோதரர்களுடன் இணைந்து நாங்களும் கலந்து கொள்வோம். ஐந்து வேளையும் தவறாது தொழுகை நடத்துவதுடன் நான் ஹஜ் புனித யாத்திரைக்கான கடமையையும் முடித்துள்ளேன். எனினும், முஸ்லிம் இமாம்களில் ஒருவராக ராமரை கருதுவதால் அவரது கோயில் விழாவில் தவறாமல் கலந்து கொள்வோம் எனக் கூறுகின்றனர். 

இதுபோல மேலும் பல முஸ்லிம்கள் ராமர் கோயிலுக்கான செங்கற்களுடன் அயோத்திக்கு வருகை தர உள்ளனர். இவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த பைஸ்கான் இடம் பெற்றுள்ளார். இவரைப் போன்ற முஸ்லிம்களின் அயோத்தி வருகைக்கு முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் எனும் அமைப்பின் தலைவரான டாக்டர் அனில் சிங் ஏற்பாடு செய்து வருகிறார்.