இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் நினைவாக டெல்லியில் பிரமாண்டமான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
டெல்லியில் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘"சந்திரசேகர் - கருத்தியல் அரசியலின் கடைசி சின்னம்’ என்று புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். விழாவில் புத்தகத்தை வெளியிட்டு மோடி பேசினார்.


“முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அவருடைய எண்ணங்கள் இன்னும் நம்மிடம் உள்ளன. சந்திரசேகருடன் இணைந்து பணியாற்றும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை. முதன் முதலில் அவரை டெல்லி விமான நிலையத்தில்தான் சந்தித்தேன். வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்கள் இருந்தாலும் எல்லா தலைவர்களிடம் சந்திரசேகர் நெருக்கம் கொண்டிருந்தார். 
உண்மையில் சந்திரசேகருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் பிரகாசித்துக்கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், காங்கிரஸுக்கு மாற்றாக கிளர்ச்சி செய்தது பெரிய விஷயம். இந்த நேரத்தில் முன்னாள் பிரதமர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிரதமர்களின் வாழ்க்கை மற்றும் பணியின் அம்சங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கும் ஒரு அருங்காட்சியகம் டெல்லியில் விரைவில் நிறுவப்படும்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.