அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் வானூர் சட்டமன்றத் தொகுதியில், இம்முறை ஒரு சாதாரணத் தொண்டன் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருப்பது தமிழக அரசியலில் ஒரு நெகிழ்ச்சியான, முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
அரசியல் என்பது செல்வந்தர்களுக்கும், வாரிசுகளுக்கும் மட்டுமேயான களம் என்ற பிம்பத்தைத் தமிழக அரசியல் அவ்வப்போது உடைத்து வந்திருக்கிறது. அந்த வரிசையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் வானூர் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பி.முருகன் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி எந்த வசதியும் இல்லாத ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர் முருகன். அதிமுகவின் கொள்கைகளையும், அரசின் சாதனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க 'அம்மா கலைக்குழு' என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தவர். ஒரு சாதாரணத் தொண்டனாக, கட்சியின் அடிமட்டத்திலிருந்து உழைத்த ஒருவருக்கு, இன்று சட்டமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு தேடி வந்துள்ளது.
ஜெயலலிதா காலத்து அரசியல் மரபு
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் காலத்தில், கட்சிக்கு உண்மையாக உழைக்கும் சாதாரணத் தொண்டர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குச் சட்டமன்ற, நாடாளுமன்ற வாய்ப்புகளை வழங்குவது வழக்கம். "கோடிக்கணக்கில் பணம் இருப்பவர்கள்தான் அரசியலுக்கு வர முடியும்" என்ற நிலையை மாற்றி, சாமானியர்களைச் சட்டமன்றத்திற்கு அனுப்பிய பெருமை அவருக்கு உண்டு.
அதே மரபை இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பின்பற்றியிருப்பது கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வானூர் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ சக்கரபாணிக்கு பதிலாக, மக்கள் மத்தியில் எளிமையாகப் பழகக்கூடிய முருகனை நிறுத்தியிருப்பது ஒரு 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' ஆகக் கருதப்படுகிறது.
எளிய மனிதர்... வலிமையான களம்!
வானூர் தொகுதி அதிமுகவின் வலுவான கோட்டைகளில் ஒன்று. இங்கு எம்.ஜி.ஆர் காலம் தொட்டு அதிமுக தொடர் வெற்றிகளைப் பெற்று வருகிறது. இத்தகைய ஒரு தொகுதியில், தன்னை ஒரு 'வேட்பாளராக' பார்க்காமல், மக்களின் ஒருவராகக் கருதும் முருகனுக்கு மக்கள் மத்தியில் இயல்பான வரவேற்பு கிடைத்துள்ளது. பணம் பத்தும் செய்யும் என்ற அரசியலுக்கு மத்தியில், 'உழைப்பு ஒன்றே போதும்' என்று முருகனுக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்பு, வானூர் தொகுதி மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
வானூர் சட்டமன்றத் தொகுதி இப்போது ஒரு நட்சத்திரத் தொகுதியாக மாறியுள்ளது. அமைச்சர்களுக்கும் பெரும் தலைவர்களுக்கும் சீட் வழங்கப்படும் சூழலில், 'அம்மா கலைக்குழு' முருகன் போன்ற எளிய மனிதர்கள் வேட்பாளராக அறிவிக்கப்படுவது, ஜனநாயகத்தின் உண்மையான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
வானூர் தொகுதியின் தேர்தல் களம் - இனி ஒரு சாமானியனின் குரலாக ஒலிக்கும்!

