18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் அவர்களின் தகுதிநீக்கம் செல்லாது என தீர்ப்பளித்த நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததற்காக தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு அண்மையில் தீர்ப்பு வழங்கியது. 

அப்போது, சபாநாயகரின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும் எனவும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். அதேநேரத்தில் மற்றொரு நீதிபதியான சுந்தர், தலைமை நீதிபதியின் கருத்தில் தனக்கு உடன்பாடில்லை என தெரிவித்ததோடு, எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செல்லாது என தீர்ப்பளித்தார். 

அதனால் வழக்கின் விசாரணை மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட சத்திய நாராயணன், இந்த வழக்கின் விசாரணை வரும் 23ம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெறும் என தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் எம்.எல்.ஏக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் நீதிபதி சுந்தர், தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது வீட்டுக்கு பெயர் குறிப்பிடப்படாத மொட்டை கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், நீதிபதி சுந்தருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிபதி சுந்தரின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு பணியில் போலீஸாருடன் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.