இஸ்லாமியரை சாகடித்தவர்கள் மீது கொலை வழக்குப்போடுங்க... கொந்தளிக்கும் திருமாவளவன்..!
அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.
சிஏஏவுக்கு எதிராக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
அந்த அறிக்கையில்,“குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மக்கள் அறவழியில் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர்.
பெண்களின் போராட்டம் வெற்றிகரமாக நடப்பதை சகித்துக்கொள்ளமுடியாமல் அவர்கள் மீது காவல்துறை வன்முறையை ஏவி இருக்கிறது. அங்கு இருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதை பார்த்த ஆண்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக அங்கே வந்துள்ளனர். அவர்களைத் கடுமையாக காவல்துறையினர் தாக்கியுள்ளனர். அந்த நெரிசலில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களைக் காவல் துறை கைது செய்துள்ளது. இந்தச் செய்தியை அறிந்ததும் நேற்றிரவு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகு சென்னை போலீஸ் கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்தவர்களை விடுவித்துள்ளார். இதனால் சாலை மறியல் போராட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
பெற்றோரின் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகிய விவரங்களைச் சேகரிக்கச் சொல்லும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்று பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகியவை தெரிவித்துள்ள நிலையில் அதனால் எந்த பாதிப்பும் இல்லை, அதை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்று இங்கே உள்ள அதிமுக அரசு கூறி வருகிறது. குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்து அதை சட்டமாக நிறைவேற்றி இன்று இந்தியா முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவுவதற்கு வழிவகுத்த அதிமுக, தமிழ்நாட்டை உத்தரப்பிரதேசத்தைப் போல வன்முறை பூமியாக மாற்றுவதற்கு திட்டமிட்டு செயல்பட்டுவருகிறது. அமைதியான அறவழிப் போராட்டங்களைக் காவல்துறையை வைத்து ஒடுக்குவதற்கு முயல்கிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் நேற்று நடந்த சம்பவம். இதை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனுமதிக்க முடியாது.
கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டது மட்டுமின்றி அவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.
நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம் என்று தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அமைதி நிலவுவதற்கு அதுதான் உகந்த வழியாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்” என்று வலியுறுத்தியுள்ளார்.