2019- பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது மத்தியபிரதேசம் மாநிலம், ஜபல்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, கொலை குற்றவாளியான அமித் ஷா பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருப்பது எவ்வளவு பெருமைக்குரியது?’ என்று கூறினார்.
 
அவரது பேச்சு அனைத்து ஊடகங்களிலும் வெளியான நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் பா.ஜனதா கவுன்சிலர் கிருஷ்ணாவதன் பிரம்பாட் என்பவர் ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்தார். அமித் ஷாவை கொலை குற்றவாளி என்று இழிவாக பேசி இந்திய தண்டனை சட்டம் 499 மற்றும் 500-வது பிரிவுகளின் கீழ், ராகுல் காந்தி அவதூறு குற்றம் இழைத்ததாக தொடரப்பட்ட இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அகமதாபாத் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

இதைதொடர்ந்து இன்று பிற்பகல் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்த அவர் நான் குற்றவாளி அல்ல என்று குறிப்பிட்டார். அப்போது, ராகுல் காந்தியின் வழக்கறிஞர் அவருக்கு இவ்வழக்கில் ஜாமின் அளிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். ராகுல் காந்திக்கு ஜாமின் அளித்த நீதிபதி இவ்வழக்கின் மறுவிசாரணையை டிசம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக, இவ்வழக்கில் ஆஜராவதற்காக டெல்லியில் இருந்து அகமதாபாத் நகருக்கு வந்த ராகுல் காந்தி, பட்டேல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடிவரும் ஹர்த்திக் பட்டேலுடன் இங்குள்ள ஓட்டலில் உணவு அருந்தினார்.