’மு.க. தர்பார்’ என்று விளிக்கப்படும் கருணாநிதியின் பரந்து விரிந்த குடும்ப சாம்ராஜ்ஜியத்தின் மிக முக்கியமான நபர் செல்வி. கருணாநிதியின் முதல் பெண் வாரிசு மட்டுமில்லை, அந்த மெகா குடும்பத்தினுள் எங்கே முட்டல், மோதல், விரிசல் விழுந்தாலும் மருந்து போட்டு ஒட்டும் பணியை செய்யும் ஆகப்பெரிய  மருத்துவச்சி. இவரது கணவர் முரசொலி செல்வம். இவர் தன் மகளை மணந்ததால் மட்டுமில்லை, தன் அக்காவின் இரண்டாம் மகன் என்ற வகையிலும் கருணாநிதிக்கு மருமகனாகிறார். 

முரசொலி மாறனுக்குப் பின் கருணாநிதி குடும்பத்துடன் பழைய உறவு கெடாமல் பாதுகாப்பதே செல்வி - செல்வம் தம்பதியரின் மிகப்பெரிய சாதுர்யம். அழகிரி பற்றி உரசல் சர்வே, தினகரன் எரிப்பு என்று அந்த குடும்பத்தினுள் பட்டாசு வெடித்தது. கலாநிதி, தயாநிதி இருவரையும் அறிவாலயத்திலிருந்தும், கோபால புரத்திலிருந்தும் விலக்கி வைத்தார் கருணாநிதி. ஆனால் மாறன் பிரதர்ஸ் மீண்டும் அந்த இல்லத்தினுள் காலெடுத்து வைக்க மிக முக்கிய காரணம் முரசொலி செல்வம். தன் அண்ணன் மாறனின் மறைவுக்குப் பின் அவரது மகன்களுக்காக எதையும் செய்திட துணிவது செல்வத்தின் குணமாகி இருக்கிறது. இது கருணாநிதி இருக்கும் போதே அந்த குடும்பத்தினுள் சிக்கலாகியது. ஆனாலும் என்ன இருந்தாலும் மகளின் கணவர் எனும் வகையில் மரியாதைக்காக வாயை மூடி மெளனம் காத்தார் கருணாநிதி. 

சரி இந்த பர்ஷனல் விஷயங்கள் இருக்கட்டும். இப்போது விஷயத்துக்குள் வருவோம். முரசொலி செல்வம் தன் பெயருக்கு ஏற்பவே தி.மு.க.வின் முக்கிய  பிரச்சார பீரங்கியான ‘முரசொலி’யில் முக்கிய பங்கு வகிக்கிறார். முன்பு நமது எம்.ஜி.ஆர். நாளிதழிலும், இப்போது நமது அம்மாவிலும் எப்படி ‘சித்ரகுப்தன்’ கவிதை பிரபலமோ அதேபோல் முரசொலியில்  ‘சிலந்தி’ பகுதி முக்கியம். இதை எழுதுவது முரசொலி செல்வம்தான். அல்லது அந்தப் பகுதிக்கு எழுதப்பட்டதில் திருத்தம் செய்வது இவர்தான். இந்நிலையில், அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகள் பதவி பறிப்பு விவகாரம் குறித்து வெளியிட்ட ‘வெறும் ரசிகர்களை வைத்து ஆட்சியை பிடிக்க முடியாது!’ என்று நெருப்பு அறிக்கை ஒன்றை விடுத்தார். இது பரவலாக பல இடங்களில் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. 

இந்நிலையில் முரசொலியின் சிலந்தியும் இந்த விவகாரத்தை டீல் செய்துள்ளது. ’ஹூ இஸ் திஸ் பிளாக் ஷீப் மே... மே... மே...’ எனும் தலைப்பில் வந்துள்ள அந்த கட்டுரையில், ரஜினியின் அந்த அறிக்கையின் முக்கிய வரிகளை குறிப்பிட்டும், அதற்கு அவரது ரசிகன் அப்பாவித்தனமாய் நியாயம் கேட்பதாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக ‘முப்பது நாற்பது வருடங்கள் ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ தகுதி ஆகிவிடாது.’எனும் ரஜியின் விமர்சனத்துக்கு ‘முப்பது நாற்பது வருடங்கள் சினிமாவில் நடித்தது மட்டுமே முதல்வர் ஆவதற்கான தகுதி என நீ கருதுவது மட்டும் சரியா?’ என்று ஆரம்பித்து வரிக்கு வரி ரஜினியை விளாசியுள்ளது சிலந்தி.

 

இது ரஜினியின் பார்வைக்குப் போக, மனிதர் கொதித்துவிட்டார். சிலந்தியின் உண்மை முகம் யார்? என்று அவர் விசாரித்தபோது ‘முரசொலி செல்வம்’ என்று தகவல் கிடைத்தது. இதன் பிறகு ரஜினியின் கோபம் பன்மடங்கு எகிறிவிட்டது காரணம், தனது ‘பேட்ட’ படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் சித்தப்பா தானே செல்வம்! என்பதுதான். கொதித்தவர் ‘என்ன நினைக்கிறாங்க அவங்க, என்னை வெச்சு படமெடுத்து பணமும் சம்பாதிக்கணும், அதே நேரத்துல அவங்க கட்சி பத்திரிக்கையில என்னை திட்டி அரசியலும் பண்ணிக்கணுமா?  கலாநிதி இதையெல்லாம் கேட்க மாட்டாரா?’ என்று ஏக டென்ஷனாகியிருக்கிறார். இது அப்படியே கலாநிதியின் காதுகளுக்கு பாஸாக, ‘முரசொலியில் வர்ற விஷயத்துக்கும் எங்க நிறுவனத்துக்கும் என்னங்க சம்பந்தம்?’ என்று உதட்டைப் பிதுக்கிவிட்டாராம். 

இந்த விஷயம் போயஸ் மற்றும் கோபால புரத்துக்கு நடுவில் பெரும் புகைச்சலை கிளப்பியுள்ளது. சிலந்தியான முரசொலி செல்வம் வசிப்பது கோபாலபுரத்தில்தான். புகைய துவங்கியிருக்கும் இந்த விவகாரத்தை எடுத்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள்...”கருணாநிதியின் மருமகன் பிள்ளையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுகிறார். விஜய்யை வைத்து ‘சர்கார்’ எடுத்து அதன் ஆடியோ வெளியீட்டுக்கு பிரம்மாண்ட மேடை போட்டுக் கொடுத்தார் கலாநிதி. விஜய் ‘நான் முதல்வரானால்’ அப்படின்னு ஸ்டாலினை சீண்டினார். அப்போது கைதட்டி ரசித்தார்  கலாநிதி. இந்த விவகாரம் தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் குடும்பத்தினுள் பஞ்சாயத்துக்களை கிளப்பிய போதும் அதை சீராக்க முயலவில்லை கலாநிதி. 

அதேபோல் திடீரென அரசியல் இயக்கம் ஆரம்பிக்க முயன்று அ.தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் அப்படியே தி.மு.க.வுக்கு திரும்புவதை சிதறடிக்க வரும் ரஜினியை வைத்தும் ‘பேட்ட’ படம் தயாரித்திருக்கிறார் கலாநிதி. இதுவும் ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை. இப்படி தொடர்ந்து தன் தாய்மாமனார் கம் மாமனாரின் மகனுக்கு எதிராக கலாநிதி செய்யும் அக்குறும்புகளை முரசொலி செல்வத்தால் தடுக்க முடியவில்லை. அதேவேளையில் ஸ்டாலினையும் பகைக்க முடியவில்லை. காரணம், இந்த தடைகளையெல்லாம் தாண்டி நாளைக்கு தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டால் அதன் அதிகார கதகதப்பும் வேண்டும். 

அதனால்தான் ஸ்டாலினை சந்தோஷப்படுத்த முரசொலியில் ரஜினியை கடித்துவிட்டுக் கொண்டிருக்கிறார்! என்கிறார்கள். முரசொலி இப்படி சேம் சைடு கோல் போடுவதை இரண்டு தரப்புமே தெரிந்து வைத்திருக்கிறது. ஆனால்  செல்வியின் முகத்துக்காகவும், சில அரசியல் மற்றும் பிஸ்னஸ் ஆதாயத்துக்காக கண்டும் காணாமல் இருக்கிறார்கள்” என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் குடும்பத்தின் மிக பெரிய தலையாக இருக்கும் செல்வமே இப்படி டபுள் கோல் அடிக்கலாமா என நொந்து கொள்கின்றனர் திமுகவினர்.