முரசொலி நாளிதழில்  சிலந்தி எனும் பகுதியில், ஹூ ஈஸ் தி பிளாக் ஷூப் மே.... மே.... மே.... எனும் தலைப்பில் நடிகர் ரஜினிகாந்தின் சமீபத்திய அறிக்கையை வைத்து கலாய்த்தெடுத்துவிட்டது ஒரு கட்டுரை. திமுக இதுவரை மெளனமாகவே இருந்து வந்த நிலையில், ரஜினிக்கு எதிராக தன் கருத்தைச் சொல்லியிருப்பது இதுவே முதல்முறை. அதில் ரஜினியும் அப்பாவி ரசிகனும் சொல்லிக்கொள்வது போல் கட்டுரை அமைக்கப்பட்டடிருந்தது.

வெறும் ரசிகர்மன்றத்தை வைத்துக்கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்கமுடியும் என்று யாராவது நினைத்தால், அவரது புத்தி பேதலித்துள்ளது என்றுதான் அர்த்தம் என்று ரஜினிகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

ரஜினியின் இந்தக் கருத்துக்கு அப்பாவி ரசிகன் என்ன சொல்லுகிறான்? என்பது போல் எழுதப்படிருந்த மந்தக் கட்டுரையில், என்ன தலைவா? கடைசியில் இப்படி காலை வாரி விடுகிறாய்? உனக்கு கொடி பிடித்து கோஷம் போட்டு அப்பா அம்மா பெயரைக் கூட எடுத்துவிட்டு உன் பெயரை எங்கள் பெயர் முன் இணைத்து, ஊர் ஊராக, தெருத்தெருவாக உனக்கு மன்றம் அமைத்து, உன் படம் ரிலீசாகும் நாளே எங்களுக்குத் திருநாள் என்று வாணவேடிக்கை எல்லாம் நடத்திக் கொண்டாடிய எங்களை இப்படி கேவலப்படுத்துவது நியாயமா? என்று ரசிகன் கேட்பது போல் எழுதப்பட்டுள்ளது.

திமுகவின் இந்த அதிரடி அட்டாக்கால் அதிர்ந்து போன ரஜினிகாந்த், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ரசிகர்களையும், என்னையும் யாராலும பிரிக்க முடியாது என்று உருக்கத்துடன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முரசொலியின் தலைமை ஆசிரியர் இந்த கட்டுரை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து முரசொலியில் வெளிவந்த கட்டுரை சில நல்ல மனதை புண்படுத்துவதாக இருப்பதாக கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இனி அத்தகைய செய்திகளை வெளியிடுவதில் கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மிகக்கடுமையாக கட்டுரை வெளியிட்டு தற்போது முரசொலி நாளிதழ் பம்மியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.