தூத்துக்குடியில் மே 15ம் தேதி பத்திரிகையாளர்களிடம் பேசிய பாஜக மாநில  தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ‘பாஜகவுடன் திமுக பேசி வரும் தகவல் உண்மைதான்’ என்று ஒரு நாட்டு வெடிகுண்டைப் போட்டார். ராகுல் காந்தியைப் பிரதமராக முன்மொழிந்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வரும் நிலையில் தமிழிசை இவ்வாறு கூறியது தி.மு.க.வுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

தமிழிசை கூறியதை நிரூபித்தால் தான் அரசியலை விட்டு விலகத் தயாராக இருப்பதாகவும், நிரூபிக்கத் தவறினால் மோடியும், தமிழிசையும் அரசியலை விட்டு விலகுவார்களா..? என்றும் ஸ்டாலின் சவால் விடுத்தார். இந்நிலையில், நேற்று  பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை விமர்சித்து ’அடுக்குமொழி அம்மாளு தமிழிசை வெட்கப்படவேண்டாமா..?’ என்ற தலைப்பில் திமுக நாளேடு முரசொலியில் கட்டுரை வெளியாகியுள்ளது. 

சிலந்தி என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள அந்தக் கட்டுரையில், ”உண்மையாகவே அப்படி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தால், ஒரு கட்சியின் தலைமை வகிக்கும் ஒருவர் அதனை பகிரங்கமாகக் கூறுவாரா..? இவர்பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்' என்று கூறுவதிலிருந்தே, இது அப்பட்டமான பொய் என்று தெரியவில்லையா..? தமிழகத்தின் அரசியல் கட்சியோடு, தனது கட்சி பேச்சுவார்த்தை நடப்பது தமிழகத்தின் தலைவரான தமிழிசைக்கே தகவலாகத்தான் தெரியுமென்றால், அது வெட்கக்கேடல்லவா..?” என்று கூறப்பட்டுள்ளது.

’கடந்த பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது ஏன்..?’ என்ற கேள்வியை எழுப்பி அதற்கும் அக்கட்டுரையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ”தமிழகத்தில் நடைபெற்ற திமுக ஆட்சியைக் கலைக்கவேண்டுமென வற்புறுத்திய ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார், அன்றைய பிரதமர் வாஜ்பாய். அவர் ஒரு ஜனநாயகப் படுகொலைக்கு உடன்பட மறுத்தார். அதற்காக அதிமுக அவருக்கு அளித்த ஆதரவைத் திரும்பப்பெற, ஆட்சி இழக்கும் நிலை உருவானது. திமுக ஒரு கட்டத்தில் காங்கிரசுக்கு எதிராகவும், இன்னொரு கட்டத்தில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாகவும் எடுத்த நிலைக்கு அடிப்படைக் காரணம், ஜனநாயகம் காக்கப்படவேண்டும் என்பதுதான்.

அந்தக் கூட்டணியிலும் திமுக அதன்அடிப்படைக் கொள்கைகளை விட்டுக் கொடுத்து கூட்டணி சேரவில்லை. பிஜேபிதான் தனது அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டு, குறைந்தபட்ச செயல்திட்டங்களோடு திமுகவுடன் கூட்டணி கண்டது என்பது வரலாற்று வெளிப்பாடுகள். திமுகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்த தேர்தலின்போது பிஜேபி தனக்கென ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது” என்று கூறப்பட்டுள்ளது.