Munisekar apologizes to Periyapandi wife Tears telling the events that happened!
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை பிடிக்க சென்ற போது பெரியபாண்டியன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். பெரியபாண்டியை சுட்டது யார் என்பது குறித்து மர்மம் நீடித்துக்கொண்டே வந்தது.
இது தொடர்பாக ராஜஸ்தான் போலீசார் நடத்திய விசாரணையில் பெரியபாண்டியன் உடலில் இருந்த குண்டு, முனிசேகர் துப்பாக்கியில் இருந்ததுதான் என்றும், முனிசேகர் தவறுதலாக சுட்டதால்தான் பெரியபாண்டி உயிரிழந்ததாகவும் ராஜஸ்தான் போலீஸ் கூறியிருந்தது. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் மற்றும் உறவினர்கள் சிலரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் ராஜஸ்தான் போலீஸ் கூறியதை சென்னை போலீஸ் உறுதி செய்துள்ளது. அதாவது, மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனை சுட்டது முனிசேகர்தான் எனவும் கொள்ளையன் நாதுராமை பிடிக்க முனிசேகர் சுட்டபோது குறி தவறி பெரிய பாண்டியன் உயிரிழந்துள்ளார் எனவும் சென்னை போலீஸ் உறுதிபட தெரிவித்துள்ளது.
முனிசேகரின் துப்பாக்கி குண்டுதான், பெரியபாண்டியின் உடலை துளைத்தது என்று ராஜஸ்தான் போலீசார் கூறியபோது, முனிசேகர் என் கணவரின் நெருங்கிய நண்பர் என்றும், அவர் சுட்டு இருக்க வாய்ப்பில்லை என்றும் பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா கூறியிருந்தார்.
இந்த நிலையில், ராஜஸ்தான் போலீஸ் கூறியதை தமிழக போலீசார் நேற்று உறுதி செய்தது. இதனை அடுத்து, முனிசேகர், பெரியபாண்டியின் சொந்த ஊரான சங்கரன் கோவிலுக்கு சென்றார். அங்கு பானுரேகாவின் காலில் விழுந்து முனிசேகர் மன்னிப்பு கேட்டு அழுதுள்ளார். பானுரேகாவின் தந்தை வெள்ளைப்பாண்டியன் காலில் விழுந்தும் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கொள்ளையர்களை சுட முயன்றபோது குறி தவறி பெரியபாண்டியை குண்டு தாக்கியதாக கூறி முனிசேகர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ராஜஸ்தானில் நடந்த சம்பவங்களை பெரியபாண்டியின் குடும்பத்தாரிடம் கூறி மன்னிப்பு கேட்க, காவல் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பானுரேகாவை சந்தித்து, முனிசேகர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
