மும்பையில்சிவசேனாவுக்குகாங்கிரஸ்ஆதரவுஅளிக்குமா?
மாநகராட்சிமேயர்பதவியாருக்குஎன்பதில்இழுபறி
மும்பை மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றுவதில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பொறுத்திருந்து முடிவு எடுக்க காங்கிரஸ் தீர்மானித்து உள்ளது.
நாட்டிலேயே வளம் கொழிக்கும் மாநகராட்சியாக வர்த்தக தலைநகரான மும்பை விளங்கி வருகிறது.
மும்பை மாநகராட்சி மேயராக கடந்த 25 ஆண்டுகளாக சிவசேனாவை சேர்ந்தவர்கள்தான் பதவி வகித்து வந்தனர். இந்த நிலையில், தங்களுடைய நீண்ட கால கூட்டணியை பா.ஜனதாவும் சிவசேனாவும் முறித்துக்கொண்டு இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டன.
சிவசேனா-பாஜனதா
மும்பை மாநகராட்சி தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை என்றாலும், 227 உறுப்பினர்களைக்கொண்ட மும்பையில் 84 இடங்களில் வென்ற சிவசேனா தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
சிவசேனாவில் டிக்கெட் கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற 3 உறுப்பினர்கள் நேற்று முன்தினம் சிவசேனாவில் இணைந்ததால் அதன் பலம் 87 ஆக உயர்ந்தது. 82 இடங்களில் வென்ற பா.ஜனதா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
‘நாங்கள்தான் மேயர்’
இந்த நிலையில், மும்பை மேயர் பதவி தங்களுக்குத்தான் என்பதில் சிவசேனா உறுதியாக உள்ளது. பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளதால், காங்கிரஸ் ஆதரவு இருந்தால் மட்டுமே சிவசேனாவுக்கு இது சாத்தியமாகும்.
பெரும்பான்மை பலம் பெறுவதற்கு 114 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. காங்கிரஸ் கட்சிக்கு 31 கவுன்சிலர்கள் இருப்பதால், அவர்கள் ஆதரித்தால் நிச்சயம் மாநகராட்சியை சிவசேனாவால் கைப்பற்ற முடியும். ஆனால், காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.
5 மாநில தேர்தல் முடிவு
இந்த விஷயத்தில் பொறுத்திருந்து முடிவு எடுக்க காங்கிரஸ் தீர்மானித்து இருக்கிறது. அனேகமாக 5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தனது முடிவை காங்கிரஸ் அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதே நேரத்தில் பா.ஜனதா மூத்த தலைவரான நிதின் கட்கரி, மும்பையில் பா.ஜனதாவும் சிவசேனாவும் மீண்டும் கூட்டணி அமைப்பதை விட வேறு வழி இல்லை என ஏற்கனவே கருத்து தெரிவித்து இருக்கிறார்.
காங்கிரஸ்-பா.ஜனதா
அதே நேரத்தில் காங்கிரசுடன் பா.ஜனதா கூட்டணி வைத்துக்கொள்ளும் வாய்ப்பே இல்லை என, மாநில பா.ஜனதா தலைவர் அஷிஷ் ஷெலார் நேற்று திட்டவட்டமாக அறிவித்தார்.
மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனா 84 இடங்களிலும் (தற்போது 87) பா.ஜனதா 82 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா முறையே 9 மற்றும் 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்தக் கட்சிகள் தவிர ஏ.ஐ.எம்.ஐ.எம். 2 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 6 இடங்களிலும், அகிலபாரதிய சேனா 1 இடத்திலும், சுயேச்சைகள் 5 இடங்களிலும் (இவர்களில் 3 பேர் தற்போது சிவசேனாவில் இணைந்துவிட்டனர்) வெற்றி பெற்றுள்ளனர்.
பா.ஜனதாவை ஆதரிக்க
காங்கிரசில் எதிர்ப்பு
மும்பை மாநகராட்சி மேயர் பதவிக்கு சிவ சேனாவுக்கு ஆதரவு அளிப்பதற்கு காங்கிரசில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சிவசேனாவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரிக்கக்கூடாது என, காங்கிரஸ் மூத்த தலைவர் குருதாஸ் காமத் கூறி இருக்கிறார்.
‘‘இரு காவி கட்சிகளையும் எதிர்த்துதான் காங்கிரஸ் போட்டியிட்டது. எனவே அந்த கட்சிகளுடன் கூட்டணிக்கு முயற்சித்தால் மக்கள் நம்மை சும்மா விடமாட்டார்கள்.
அவர்களுடைய (பா.ஜனதா-சேனா) பிரச்சினைகளுக்கு அவர்களே தீர்வு காணட்டும். இதன் மூலம் தங்களை மட்டுமின்றி அவர்களுடைய அதிகார வெறியும் அம்பலத்துக்கு வந்துவிடும்’’ என காமத் கூறி இருக்கிறார்.
தனது கருத்தை சோனியா மற்றும் ராகுல் காந்தியிடம் கூறி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில். சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றால், முதலில் அவர்கள் மாநில பா.ஜனதா அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என, காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கருத்துதெரிவித்த உள்ளனர்.
---
